மாஸ்க்கால் மல்லுக்கட்டு, 6 ந் தேதிக்கு முன்பு என்ன செஞ்சீங்க ஆபீசர்..! அபராதமும்.. ஆதங்கமும்..!

0 18774
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாமல், சமுக இடைவெளியை பின்பற்றாத கடைகளில் அபராதம் விதித்த அதிகாரிகளிடம் கடந்த 6 ந்தேதிக்கு முன்பு எங்கே போயிருந்தீர்கள் ? எனக் கேட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாமல், சமுக இடைவெளியை பின்பற்றாத கடைகளில் அபராதம் விதித்த அதிகாரிகளிடம் கடந்த 6 ந்தேதிக்கு முன்பு எங்கே போயிருந்தீர்கள் ? எனக் கேட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் நேரத்தில் பெருங்கூட்டமாக வீதி வீதியாக அலட்சியமாக சுற்றிய அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளாமல் விட்ட அதிகாரிகளின் மெத்தனத்தாலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.

இந்த நிலையில் தேர்தல் நாளான கடந்த 6 ந்தேதிக்கும் பின்னர் திடீர் ஞானோதயம் தோன்றியது போல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. முககவசம், சமுக இடைவெளியை பின்பற்றாதவர்கள், வீதியில் எச்சில் துப்புபவர்களிடம் கறாராக அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது.

காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்தும் அபராத வசூல் வேட்டையில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரங்கேறும் வாக்குவாதங்களும் , மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தஞ்சாவூரில் முககவசமில்லாமல் வந்து நானும் ரவுடிதான், தாட் பூட் என்று குதித்து வம்பு வளர்த்த லேடி டைகர், காவல் நிலையம் சென்று தன்னால் மாஸ்க் அணிய முடியாதது ஏன் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துச்சொன்னார்.

ஆனால் போலீஸ் வழக்கு ஏதும் பதிவு செய்து விடக்கூடாது என்பதால், நேர்கொண்ட பார்வை படத்தின் அஜீத் போல பைபோலார் டிசார்டர் என்ற கோபக்கார நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கமுதியில் அரைமாஸ்க்குடன் வாகனங்களை மறித்த காவல் உதவி ஆய்வாளர் சுகாதாரத்துறையினருடன் இணைந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டபோது சிக்கிய லாரி உரிமையாளர், ஒரு அட்ஜெஸ்மெண்ட் கிடையாதா ? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார்.

ஒருமையில் அழைத்த உதவி ஆய்வாளருக்கு சரிக்கு சமமாக நின்று வாக்குவாதம் செய்த லாரி உரிமையாளர் சிபாரிசுக்கு ஒருவரை பேச வைத்த பின்னரும் அவரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதால் ஆத்திரத்தில் திட்டி தீர்த்தார்.

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் கடை கடையாக மாஸ்க், சமூக இடைவெளியை சரி பார்த்து அபராதம் விதித்தனர். அப்போது ஒரு கடையில் 5 பேர் கூட்டமாக நின்று பழரசம் அருந்திக் கொண்டிருப்பதை பார்த்து அந்த கடைக்காரருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததால், கடைக்காரர் கடந்த 6ந்தேதி வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று எதிர்கேள்வி எழுப்பி அதிகாரியை திணற வைத்தார்.

மேலும் தினமும் தனது கடைக்கு வந்து அபராதம் விதிப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் அபராதம் விதிக்காமல் இருக்க நகராட்சி ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும் வியாபாரி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

ராமநாதபுரம் திருவாடனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு துணையாக மாஸ்க் வசூலில் ஈடுபட்ட ஏட்டையா ஒரு வாகன ஓட்டியின் சாவியை எடுத்ததால் அவர் வண்டியை வைத்துக் கொள்ளச்சொன்னதுடன், இந்த கொரோனாவால் வாழ்வாதாரமே போச்சு என்று கொந்தளித்தார்.

மஞ்சள் வேட்டி சாமியாரை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைத்ததால் ஆவேசமான அவரை ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஒரு கட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் மாஸ்க் அணியாதவர்களுக்கு , அபராதத்துடன் மாஸ்க் இலவசமாக வழங்கப்பட்டது.

அபராதம் வசூலிக்கும் அரசு ஊழியர்களுக்கும், முககவசம் இல்லாமல் சிக்கும் மக்களுக்கும் ஏற்படும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க உயர் அதிகாரிகள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments