ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; கைகலப்பு..!

0 10748
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; கைகலப்பு..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வெளியேயும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்க அனுமதி கொடுக்கலாமா? என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், இயக்கங்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஏராளமானோர் கூட்டமாக வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் செல்லாமல், பிரதிநிதிகள் மட்டும் செல்லுமாறு காவல்துறையினர் கூறியதால் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிரதிநிதிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கியதும், அதை ஒளிப்பதிவு செய்துகொண்டு செய்தியாளர்கள் வெளியேறி விடுமாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர்களை போலீசார் சமரசம் செய்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி செய்தியாளர்களை வெளியே அனுப்பிய பிறகு, கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என கூறுபவர்கள் கையை உயர்த்துமாறு சிலர் கூறியபோது அங்கிருந்த மூன்று பேர் கையை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக வசைபாடியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு கிட்டத்தட்ட கைகலப்பு உருவானது.

கூட்டத்தை அமைதிப்படுத்திய பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு எடுத்து ஆக்சிசன் உற்பத்தி செய்யலாமா? என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கருத்து கேட்டார். அதற்கும் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துக்களை அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து கூட்டத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கினர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு, கல்வீச்சும் நடைபெற்றது. பெண் ஒருவரை தாக்க முயற்சிகள் நடைபெற்றன. போலீசார் தலையிட்டு, ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments