ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் - மத்திய அரசு

0 22606

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் மட்டும் தயாரிப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையிலான 2 ஆலைகள் உள்ளதாகவும், இதில், 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு ஆலையை உடனடியாக இயக்க தயாராக உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக கொடுக்கும் வகையில், ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் ஸ்டெர்லைட் சிஇஓ கூறியிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்திலும் வேதாந்தா நிறுவனம் தனியாக மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கொரோனா பரவலால் தற்போது ஏற்பட்டுள்ள நிலை, தேசிய நெருக்கடி நிலை போல உள்ளது என, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கருத்து தெரிவித்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாட்டில் ஆக்சிஜனுக்கு மிக அவசர, அவசிய தேவை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். சுகாதாரப் பயன்பாட்டை கருதி, வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் என துஷார் மேத்தா கூறினார்.

இதனிடையே மற்றொரு விசாரணையில், ஆக்சிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், தடுப்பூசி போடும் முறை உள்ளிட்ட 4 அம்சங்களில் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் 6 உயர்நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளாக விசாரணை நடைபெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், நாடு தழுவிய தேசிய திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments