'பெற்றவரையும் பறிகொடுத்தேன்… பெற்ற மகன்களையும் இழந்தேன்'- வேலூர் அருகே பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

0 49546
'மகன்களுடன் வித்யா

வேலூர் அருகே பட்டாசு கடை விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை பறி கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை இருந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மோகன் தன் மகள் வித்யா பெயரில் இந்த பட்டாசு கடையை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி மோகன் கடைக்கு பட்டாசு வாங்க வந்த சிலர் புதிய ரக பட்டாசுகளை வெடித்து டெமோ காட்டுமாறு கூறியுள்ளனர்.

அப்போது, மோகனின் பட்டாசு கடையில் பேரன்கள் தனுஷ், தேஜஷ் ஆகியோர் இருந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் கேட்டதையடுத்து, கடைக்கருகே வைத்து மோகன் பட்டாசுகளை வெடிக்க வைத்து டெமோ காட்டியுள்ளார்.

அப்போது, தீ பொறி ஏற்பட்டு கடைக்குள் விழுந்துள்ளது. இதனால், கடைக்குள் இருந்த பட்டாசுகள் வெடித்து கடையே தீ பிடித்தது. மோகன் தன் பேரன்களை காப்பாற்ற கடைக்குள் ஓடினார்.

ஆனால், யாராலும் தப்பிக்க முடியாமல் 3 பேருமே தீயில் கருதி துடி துடித்து இறந்து போனார்கள்.

தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக பட்டாசு கடை முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டது. அருகிலிருந்த பூ கடைகள், இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கடைக்குள் கிடந்த குழந்தைகள் மற்றும் மோகன் சடலங்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இறந்த 3 பேரின் சடலங்களும் 19 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டன.

இதற்கிடையே, தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் பறி கொடுத்த வித்யா மிகுந்த சோகத்துடன் இருந்து வந்தார். உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்தனர்.

ஆனாலும், பெற்ற தந்தையையும் பெற்ற குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பறி கொடுத்த வித்யாவின் மனம் ஆறுதல் கொள்ளவில்லை. இந்த நிலையில், வித்யா இன்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை மற்றும் மகன்களை இழந்த 3 நாள்களில் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments