சினிமா பார்த்து பொம்மை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சிறுவன்… பெற்றோருக்கு கை கொடுத்த அரசு மருத்துவமனை

0 4639
சினிமா பார்த்து பொம்மை துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சிறுவன்… பெற்றோருக்கு கை கொடுத்த அரசு மருத்துவமனை

சிறுவன் காதில் சிக்கிய விளையாட்டு துப்பாக்கி குண்டை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பெண் காவலரின் மகன் கிஷோர். இவர் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கிஷோர், திரைப்படங்களைப் பார்த்து அதில் வருவது போல, பொம்மை துப்பாக்கியை வைத்து தனக்குத்தானே தன் தலையில் விளையாட்டுத் தனமாகச் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த பொம்மை துப்பாக்கியின் குண்டு தவறுதலாகச் சிறுவன் கிஷோரின் காதில் சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, வலி பொறுக்க முடியாமல் சிறுவன் அழத் தொடங்கினான். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர், குண்டை எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அழுது கொண்டிருந்த சிறுவனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்குச் சென்றனர். அங்கு அறுவை சிகிச்சை செய்தால் தான், பிளாஸ்டிக் குண்டை வெளியில் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன பெற்றோர் சிறுவனை அழைத்துக்கொண்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்களும் கை விரித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவன் கிஷோரின் பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்குச் சிறுவனை அழைத்துச் சென்றனர்.

அங்கு பணியில் இருந்த உதவி இருப்பிட மருத்துவர் மணிகண்டன் மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வரும் மருத்துவ மாணவி நித்தியா, சிறுவனின் காதில் தண்ணீர் பீய்ச்சி அடித்து பிளாஸ்டிக் குண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர், இருவருக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments