"மாற்றப்பட்ட உடல்கள்"... கலங்கி நிற்கும் உறவினர்கள்!

0 4509
"மாற்றப்பட்ட உடல்கள்"... கலங்கி நிற்கும் உறவினர்கள்!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடல்கள் உறவினர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. அதில் ஒரு உடல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டுவிட்ட நிலையில், உண்மையான உறவினர்கள் கலங்கி நிற்கின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த 70 வயதான செருப்புத் தைக்கும் தொழிலாளி அய்யாவு, கடந்த 16 ஆம் தேதி கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அய்யாவுவின் உறவினர்கள் தங்கள் தந்தையின் சடலத்தை கேட்ட போது, அவர் தவறி விழுந்து இறந்ததால் காவல்துறையினரிடம் புகார் அளித்து பிணகூறாய்வுக்கு பின்னர் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அய்யாவு உடல் பிரேத பரிசோதனைக்காக 4 ஆம் நம்பர் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து போலீசாருடன் உடலை பெற்றுச்செல்ல உறவினர்கள் வந்தனர். அப்போது அங்கு அய்யாவுவின் உடல் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அய்யாவுவின் உடல் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே நேரம் பெரியகுளத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்த 75 வயதான ராமு என்கிற முதியவரின் உடலும் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்போது, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராமுவின் உடலுக்குப் பதிலாக அய்யாவுவின் உடல் தவறுதலாக ராமுவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுக்கிறது. இதனை ஒப்புக்கொண்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், காவல்துறையினர் அடையாளம் காட்டிய உடலைத்தான் தாங்கள் பிரேத பரிசோதனை செய்ததாகக் கூறினார். 

ராமுவின் உடலுக்குப் பதிலாக அய்யாவுவின் உடலை வாங்கிச் சென்ற ராமுவின் மகன்கள், அவசர அவசரமாக அவரது உடலை எரித்து விட்டதாக கூறப்படுகின்றது. தற்போது மருத்துவமனையில் இருக்கும் ராமுவின் உடலை காட்டினாலும் அது தங்களது தந்தையின் உடல் இல்லை என அவர்கள் மறுப்பதோடு அதனை வாங்கிச்செல்லவும் மறுப்பதால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலை சுற்றி நிற்கின்றனர்.

மற்றொரு புறம் ராமுவின் உடலை வாங்க மறுத்து, அய்யாவுவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர். பிரேதப் பரிசோதனையின்போது அய்யாவுவின் உடலில் தூக்கு மாட்டியதற்கான தடயங்கள் இல்லாதது மருத்துவர்களுக்குத் தெரியவந்திருக்க வேண்டும். அப்படி இருக்க, எப்படி சடலத்தை மாற்றி தூக்கிச்சென்றனர் என்ற கேள்வி எழுகிறது. முழுவதும் திட்டமிட்டு சடலம் மாற்றி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் மருத்துவர்களிடமிருந்து மழுப்பலான பதில் மட்டுமே கிடைத்தது. 

இந்தக் குழப்பங்களுக்கு காரணகர்த்தாவான போலீசார் பதிலளிக்கவே மறுத்துவிட்டனர். சந்தேக மரணமடைந்த ராமு எப்படி இறந்தார் ? என்பது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments