செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை பறக்க விட்டது அமெரிக்காவின் நாசா

0 3805

செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படும் இத்தகைய நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளனவா? அங்கு ஏதேனும் உயிரினங்கள் இருந்தனவா என்பதை அறிந்து கொள்வது மானுட குலத்தின் பெருங்கனவாக இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு நடத்த பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக கடந்த வருடம் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் என்ற விண்ணூர்தி 7 மாதங்களில் சுமார் 292 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த முயற்சியில் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவராகப் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகனுக்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்தன. அடுத்த சில தினங்களில் பெர்சிவரன்ஸ் எடுத்த செங்கோளின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது நாசா. அடுத்த 2 ஆண்டுகளுக்கு செவ்வாயில் உள்ள பாறைகள், மணற்பாங்கான பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தும் பெர்சிவரன்ஸ் 2030ம் ஆண்டு பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோவரில் உள்ள இன்ஜெனூட்டி என்ற அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட நாசா முயற்சி மேற்கொண்டது.

மனிதர்களற்ற மற்றொரு கிரகத்தில் நாசா எடுத்துக் கொண்ட முயற்சி, இருமுறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்தத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டர் தற்போது செவ்வாய்க் கிரகத்தில் 30 வினாடிகள் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. அதன் இயக்கம் யூடியூப்பில் நேரலையும் செய்யப்பட்டது.

இன்ஜெனியூட்டி வெற்றிகரமாக பறந்ததைத் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். தற்போது பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாறு படைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments