சக்ரா பட பாணியில் கொள்ளை.. முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு..!

0 2401

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சக்ரா பட பாணியில், வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

சுதந்திர தினத்தன்று, சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் திட்டமிட்டு கொள்ளை சம்பவம் நடப்பது போன்ற காட்சி சக்ரா படத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இதேபாணியில், திண்டிவனம் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள 5 வீடுகளில் ஒரே கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் மரக்காணம் சாலையிலுள்ள பிலவேந்திரன் என்பவரது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கியதோடு 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு மஹிந்திரா XUV காரில் தப்பிச் சென்றனர். அங்கிருந்து, ஜக்காம்பேட்டையில் குமார் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியதோடு, வரதராஜன் வீட்டில் எல்.இ.டி டிவியையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்ந்து, அவனம்பட்டிலுள்ள காத்தவராயன் என்பவரது வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து, முதலில் உறவினர் எனக்கூறி நடித்து கதவை திறக்கச் சொல்லியுள்ளனர். அவர்கள் கதவை திறக்காததால், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து பொதுமக்கள் வரவே, கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.

இதனையடுத்து, கன்னிகாரபும் பகுதியில் ஞானசேகர் குடும்பத்தினர் காற்றோட்டத்திற்காக கதவை திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, கத்தி, துப்பாக்கி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், குடும்பத்தினரை மிரட்டி நகை, பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடியதால், காரை அங்கேயே விட்டுவிட்டு, வயல்காட்டில் புகுந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

கார் மற்றும் காரில் இருந்த துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments