காதலை கைவிட்ட பெண்.. கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..!

0 27035

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திருமணம் செய்ய மறுத்ததற்காக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் பிடிபட்டுள்ளான்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவனும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரங்கசாமி வேறு சமூகம் என்பதால், சரஸ்வதிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. ரங்கசாமி தலைமறைவாக இருந்ததால், அவனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 2 வார தேடலுக்குப் பின் தனது கூட்டாளிகள் இருவருடன் ரங்கசாமி ஆந்திர மாநில எல்லையில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரங்கசாமி அவனது நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் போலீசார். சரஸ்வதிக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ரங்கசாமி, சம்பவத்தன்று நள்ளிரவு சரஸ்வதிக்குப் போன் செய்துள்ளான்.

தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சரஸ்வதியை தனியே வரவழைத்த ரங்கசாமியிடம், படங்களை வெளியிட வேண்டாம் என கெஞ்சியுள்ளார் சரஸ்வதி.

அதற்கு மறுப்பு தெரிவித்த அவன், இப்போதே தன்னுடன் வரவேண்டும் என மிரட்டி இருக்கிறான். சரஸ்வதி முடியவே முடியாது என மறுத்ததாக கூறப்படும் நிலையில், எனக்குக் கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறி, அவரது துப்பாட்டாவைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பதாக போலீசார் கூறுகின்றனர். பின்னர் சரஸ்வதியின் உடலை தூக்கி வந்து அவரது வீட்டுக்குப் பின்புறம் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான் ரங்கசாமி.

18 வயதே ஆன சரஸ்வதிக்கு இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் சென்ற பின் நல்லதொரு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்ற கனவில் இருந்த அவரது பெற்றோர், காதல் விவகாரம் தெரியவந்ததால்தான் அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது சரஸ்வதியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments