இளவரசருக்கு இறுதி மரியாதை..! பிரிட்டனில் பிரியா விடை

0 3384
இளவரசருக்கு இறுதி மரியாதை..! பிரிட்டனில் பிரியா விடை

இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப்பின் உடல், முழு அரச மற்றும் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட இளவரசர் பிலிப், லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் (Windsor) கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில், இளவரசர் பிலிப், இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கொரோனா பரவலால் பொதுமக்கள் அஞ்சலி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அரச குடும்பத்தினரின் வழக்கப்படி அஞ்சலி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று, சனிக்கிழமை பிற்பகலில் எடின்பெரோ கோமனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

வின்ட்சர் கோட்டையில் இருந்து அவரே முன்பு வடிவமைத்த லேண்ட் ரோவர் காரில் உடல் எடுத்துவரப்பட்டு புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி இறுதி பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். பிரிட்டன் அரசின் சார்பில் முழு இராணுவ மரியாதையுடன், இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

எடின்பெரோ கோமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக, இங்கிலாந்து முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில், ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, டவர் ஆப் லண்டனில், சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்க, முழு இராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments