மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி..! ரசிகர்கள், கலைஞர்கள் திரளாக அஞ்சலி

0 2336
மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி..! ரசிகர்கள், கலைஞர்கள் திரளாக அஞ்சலி

டிகர் விவேக் மறைவுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்கள், அவரது ரசிகர்கள், மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். நாடக கலைஞர்கள் உள்ளிட்டோரும், விவேக் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

சேலம்:

சேலம் மாநகரில், சேவகன் அறக்கட்டளையினர், ரசிகர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே மரக்கன்றுகள் நட்டு, நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக் கேட்டுக்கொண்டபடி, இதுவரை 15 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலை:

விவேக் மறைவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தன்னார்வ அமைப்பினர், மரக்கன்றுகளை விநியோகித்ததோடு, அவற்றை நட்டும் மரியாதை செய்தனர்.

வேலூர்:

வேலூரில், சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தினேஷ் சரவணன் என்ற இளைஞர், வீடு, வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கி நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில், நடிகர் விவேக் மறைவுக்கு சமூக நலச் சங்கத்தினர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை:

சிவகங்கையில், நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவரது ரசிகர்கள், அனைத்து மகளிர் காவல்நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தஞ்சாவூர்:

கும்பகோணத்தில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், படத்திற்கு மலர் தூவியும், மரக்கன்றுகளை நட்டு வைத்தும், அஞ்சலி செலுத்தி, பசுமையை காக்க உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

திருச்சி:

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு, திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தினர், ஈபி சாலையில் நடைபெற்ற நிகழ்வில், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை:

சென்னை பூந்தமல்லியை அடுத்த மாங்காட்டைச் சேர்ந்த கானா பாடகர் சதீஷ் என்பவர், தமது இல்லத்தில் மரக்கன்றை நட்டு அஞ்சலி செலுத்தியதுடன், விவேக் மறைவிற்கு, கானா பாடல் மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விவேக் தொடங்கி வைத்த ஒயிட் ஆக்ஸ் மாடர்ன் அக்ரி அமைப்பினர் நாலாட்டின் புதூர் காவல்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, திசையன்விளையில் நடிகர் விவேக் மறைவிற்கு இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments