தேங்கும் நெல் மூட்டைகள்.. வேதனையில் விவசாயிகள்..!

0 1356

விழுப்புரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பின் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சம்பா அறுவடை முடிந்து ஆங்காங்கே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகள் வந்தவண்ணம் உள்ளன. அப்படி கொண்டு வரப்படும் நெல் மாதக்கணக்கில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகேயுள்ள குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள், 20 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தனியார் வியாபாரிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுப்பதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நாளொன்றுக்கு 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவு இருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் கொண்டுவரப்படுவதால் தேக்கம் அடையும் நிலை ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்,நன்னிலம்,குடவாசல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படாமல் திறந்தவெளியில் கிடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கி விட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். 

மயிலாடுதுறை அடுத்த வில்லியநல்லூர், மல்லியம், முளப்பாக்கம், மங்கைநல்லூர், பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் மழையில் நனைந்து முளை விட்டுள்ளன. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லவாரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், திறந்தவெளியில் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. சுமார் 7 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், உடனடியாக அவற்றை கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

கும்பகோணம் அடுத்த பாபநாசம், தாராசுரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, நடுவக்கரை, சோழன்மாளிகை, அசூர் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் தார் பாய் பற்றாக்குறையால் மழையில் நனைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் மாறிப்போயிருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments