தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு என புகார்

0 1594

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 150க்கு மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மேலும் பல மையங்களிலும் தடுப்பு மருந்து இல்லாததால் தடுப்பூசி போட வந்தோருக்கு டோக்கன் வழங்கி மறுநாள் வரும்படி கூறி அனுப்பி வைத்தனர். ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று போதிய மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி போட வந்த போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இன்று 10 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு நூற்றுக்கு மேற்பட்டோரைத் திருப்பி அனுப்பினர். அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்து இருப்பு இல்லை எனக் கூறிப் பொதுமக்களை திருப்பினர். ஒரு சிலர் பல மணி நேரம் காத்திருந்த பின் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 86 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இன்று மருந்து இருப்பு இல்லாததால் அறுபதுக்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போட வந்த மக்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் முகாமில் இன்று 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்டோரிடம் தடுப்பு மருந்து இருப்பு இல்லாததால் திங்களன்று வரும்படி அலுவலர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். ஐயாயிரம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளதாகவும், அவற்றை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குப் பகிர்ந்து அனுப்பியுள்ளதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments