சென்னை பல்லாவரத்தில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயற்சி - 5பேர் கைது..!

0 15836
சென்னை பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இருவர் உள்ளிட்ட 5 பேர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இருவர் உள்ளிட்ட 5 பேர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர்ந்த, 8 மாத கர்ப்பிணியான கீதா, கடந்த 9ஆம் தேதி வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் சிலையை கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, சங்கிலி பறிப்பு முயற்சி நடைபெற்றது.

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவன், கீதாவை கீழே தள்ளி தரதரவென பல அடி தூரம் சாலையில் இழுத்து, சங்கிலியைப் பறிக்க முயன்றான். சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிலர் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

ஆனால் அந்த பெண் 11 பவுன் தாலிச் சங்கிலியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டதோடு, அக்கம் பக்கத்தில் இருந்து ஆட்கள் வரத் தொடங்கவே, சங்கிலி பறிப்பு முயற்சியை கைவிட்டு திருடன் ஓடிவிட்டான்.

இந்நிலையில், சங்கிலியைப் பறிக்க முயன்ற, மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற நபரையும், வாகனத்தை ஓட்டி வந்த கிரண்குமார் என்ற நபரையும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் மதுரையில் கொலை வழக்குகள் உள்ளதோடு, சென்னையில் தொடர் சங்கிலிப் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்திக், விஜய், தினேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

காலை நேரத்தில் கோவிலுக்குச் செல்லும் பெண்கள், வாசலில் கோலம் போடும் பெண்களை குறிவைத்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று, ஜமீன் பல்லாவரத்தில் சங்கிலி பறிப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, பெரவள்ளூரில் 3 பேரிடம் சங்கிலி பறித்துள்ளனர்.

பிரதான குற்றவாளிகள் இருவரும் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறையில் புதுப்புது கூட்டாளிகளுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, வழிப்பறியை தொடர்ந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 4 சவரன் தங்க செயின், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments