ஆஸ்கார் ரவிக்கு அல்வா கொடுத்த அந்நியன் ஷங்கர்..! அடுத்த கதை பஞ்சாயத்து

0 2889
ஆஸ்கார் ரவிக்கு அல்வா கொடுத்த அந்நியன் ஷங்கர்..! அடுத்த கதை பஞ்சாயத்து

எந்திரன் படத்தின் கதை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்கே விடைகிடைக்காத நிலையில், அந்நியன் படத்தின் கதையை சுஜாதாவிடம் இருந்து விலைக்கு பெற்றதாக கூறி ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். அந்நியன் கதைக்கான உரிமம் தன்னிடம் இருப்பதாக ஷங்கர் அறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

1996 ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளர் அரூர் தமிழ் நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி எந்திரன் என்ற படம் எடுக்கப்பட்டதாக இயக்குனர் ஷங்கர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக எழும்பூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

எந்திரன் கதை யாருக்கு சொந்தம் என்பதற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரன்பீர்சிங்கை வைத்து பிரமாண்டமாக இயக்க இருப்பதாக அறிவித்த ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்திருக்கிறார் அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

ஏற்கனவே ஷங்கரை வைத்து ஐ என்ற பிரமாண்ட படம் எடுத்து வீடு வாசல்களை ஏலத்தில் பறிகொடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், அன்னியன் கதையை சுஜாதா தன்னிடம் விற்றுவிட்டதாக ஒரு குண்டை தூக்கிபோட்டதோடு, அந்நியன் கதைக்கான முழு உரிமமும் தன்னிடம் உள்ளது என்றும் இயக்குனர் ஷங்கருக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறியிருந்தார். ஆதாரமாக அந்நியன் கதைக்காக எழுத்தாளர் சுஜாதாவிடம் சில லட்சங்களுக்கு போட்டுக் கொண்ட ஒப்பந்த நகலையும் ஷங்கருக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு , நோட்டீஸ் அனுப்பியுள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது வரை அந்நியன் படத்துக்கான கதை தொடர்பான உரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும், படத்தின் டைட்டில் கார்டிலேயே கதை என தனது பெயர் மட்டுமே இடம் பெற்று இருக்கும் என்றும் சுஜாதா அந்நியன் படத்திற்கான வசனம் மட்டுமே எழுதியதாகவும் கூறியுள்ளார்.

அந்நியன் கதை உருவாக்கத்தில் எந்த இடத்திலும் சுஜாதாவின் பங்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஷங்கர், ஏற்கனவே அந்நியன் பட வெளியீட்டின் மூலம் பெரிய அளவில் வருவாய் பெற்றுள்ளீர்கள் அந்நியன் கதை தன்னுடையது, அதற்கான உரிமை தன்னிடம் மட்டுமே உள்ளது அதில் தலையிட தங்களுக்கு உரிமையில்லை என்று அந்த மறுப்பு நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

இப்போது அனைவருக்கும் எழுகின்ற ஒரே கேள்வி, மறைந்த எழுத்தாளர் சுஜாதா, அந்நியன் கதை தன்னுடையது என்று ஆஸ்கார் ரவிச்சந்திரனை ஏமாற்றி விற்றுவிட்டாரா ? அல்லது சுஜாதா பெயரை பயன்படுத்தி ஆஸ்கார் ரவிச்சந்திரன், அந்நியன் கதைக்கு சொந்தம் கொண்டாடுகின்றாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கமாக எந்த ஒரு படத்தையும் வேறு மொழியில் படமாக்க விரும்பினால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் இருவருக்கும் குறிப்பிட்ட தொகை கொடுத்து முறையான அனுமதி பெற்ற பின்னரே படப்பிடிப்பை தொடங்க இயலும் என்று கூறப்படுகின்றது. முன்னதாக நூறு கோடிகளுக்கு மேல் செலவு செய்துள்ள இந்தியன் 2 படத்தை முடித்து கொடுத்து விட்டுத்தான் இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று தடை ஆணை கோரி லைக்கா புரொடக்ஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அந்தவகையில் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 இழுத்துக் கொண்டிருக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், ரன்பீர்கபூர் நடிப்பில் இந்தியில் அன்னியன் அவ்வளவு எளிதில் தயாராக வாய்ப்பில்லை என்பதே கோடம்பாக்கம் வட்டாரம் சொல்லும் சேதியாக உள்ளது.

அதே நேரத்தில் கற்பனைக்கு எட்டாத டுவிஸ்ட்களை வைத்து பிரமாண்ட படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கருக்கு, லைக்கா சுபாஸ்கரனும், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் அடுத்தடுத்து வைக்கும் டுவிஸ்டுகளால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து நிற்கிறார் இயக்குனர் ஷங்கர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments