வேட்டை ராஜா பராக்...கன்றுக்கு உதவிடும் காவல் தெய்வம்...

0 2953

மதுரை மாவட்டத்தில், தன் கால்நடை நண்பர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள வேட்டை ராஜா என்றும் நாயின் கதை காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் செலுத்தும் அன்பு விலைமதிப்பற்றதாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி, மிருகங்கள் காட்டும் பாசத்திற்கு ஈடு இணை இல்லை. அதிலும் நாய்கள் என்றால் சொல்லவே வேண்டாம். விசுவாசத்திற்கும், பாசத்திற்கும் பெயர் போன நாய்கள், பல இடங்களில் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எஜமானர்களைக் காப்பாற்றிய கதைகளைப் பலரும் கேட்டிருப்போம்.
அப்படி அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் நாய் ஒன்று தனது நண்பர்களுக்குப் பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருந்து வருகிறது.

உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பார்பட்டி பகுதியில் ரயில்வே பீடர் தெருவில் பால்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மிருகங்கள் மீது அதீத பாசம் கொண்ட பால்ராஜ் பசுமாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி, வீட்டுக்காவலுக்காக இரண்டு நாய்களையும் வளர்த்து வருகிறார். பால்ராஜும் அவரது மனைவியும் தனது சொந்த பிள்ளைகளை போல, ஆடு மாடுகள் மற்றும் நாய்களை அக்கறையுடன் பார்த்து வருகின்றனர் .

வேட்டைராஜா மற்றும் ராக்கி என்று பெயரிடப்பட்ட இரண்டு நாய்களும் படு சுட்டி. அதிலும் வேட்டை ராஜாவிற்கு பாலராஜின் வீட்டில் வளரும் கால்நடைகள் மீது அளவுகடந்த பிரியம்.

பால்ராஜின் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று அமைத்துள்ளது. வழக்கமாக அந்த தோட்டத்திற்கு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வார் பால்ராஜ். உடன் வேட்டை ராஜாவும் தவறாமல் சென்று விடும்.

பசுக்களை பால்ராஜ் பிடித்துக்கொள்ள, கன்று ஒன்றை வேட்டை ராஜா பிடித்துக் கொள்ளும். கன்றின் கழுத்தில் இருக்கும் கயிற்றை, லபக் என்று வாயில் கவ்விக் கொண்டு, எஜமானை பின்தொடர்ந்து, கன்றை தோட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வேட்டை ராஜா. அந்த கன்றும் , எந்த சேட்டையும் செய்யாமல், வேட்டை ராஜாவுடன் அழகாக நடந்து செல்லும்.

மேய்ச்சலுக்குப் போகும் இடத்தில், காலை முதல் மாலை வரை வேட்டை ராஜா தான் அந்த பசு மாடுகளுக்குக் காவல். மாலையில் வீடு திரும்பும்போது, சில சமயங்களில் டிராபிக் இருந்தால் கூட, கன்றின் பிடியை விடாமல், பாதுகாப்பாகப் பால்ராஜின் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கிறது வேட்டை ராஜா.

இவ்வாறு இரண்டு வருடங்களாக, தனது கால்நடை நண்பர்களுக்காக வேட்டை ராஜா செய்யும் உதவியைக் கண்டு ஊர் மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

பால்ராஜ் வீட்டிற்கு மட்டும் அல்ல அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் வேட்டை ராஜா செல்லம் தான். அதுமட்டும் அல்ல, காவல் காப்பதில் வேட்டை ராஜா படு கெட்டி. "வேட்டை ராஜா இருக்குற வர திருடுறதுக்கு ஒரு பய நெருங்க முடியாது" என்கிறார்கள் ஊர் மக்கள். வேட்டை ராஜா இருப்பதால் தான் இரவில் பயமில்லாமல் தூங்குவதாகவும் , வேட்டை ராஜா நாய் அல்ல எங்களின் காவல் தெய்வம் என்றும் உருக்கமாகக் கூறுகிறார்கள்.

வேட்டை ராஜாவின் பொறுப்புணர்ச்சியும் அன்பும் காண்போரை நெகிழச் செய்கிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments