கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளும் போதியளவில் கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர்

0 2602
கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து மருந்துகளும் போதியளவில் கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தடுப்பூசி உட்பட அனைத்து வகை மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் உடன் இணைந்து, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், பொதுமக்கள் நினைத்தால், மாஸ்க் அணிவது உள்ளிட்டவை மூலம், தொற்று பரவல் சங்கிலித் தொடரை உடைக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் தகவல்களை சேகரிக்க உதவும் ஆங்கில படிவம், இனி தமிழிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவை, அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments