நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம்..! பெண் பிள்ளை என்பதால் கொலையா?

0 3401
நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம்..! பெண் பிள்ளை என்பதால் கொலையா?

நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாமக்கல் அடுத்த எருமப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சூர்யா - கஸ்தூரி தம்பதியினருக்கு 6 வயதிலும், 4 வயதிலும் இரு பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கருவுற்றிருந்த கஸ்தூரிக்கு இம்மாதம் தொடக்கத்தில் குழந்தை பிறந்துள்ளது. மூன்றாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் சூர்யாவும், அவரது மனைவி கஸ்தூரியும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 3 குழந்தைகள் இருப்பதால் குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு மறுப்புத்தெரிவித்த சூர்யா - கஸ்தூரி தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். எனினும், அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் குழந்தை எப்படி உள்ளது என்பது குறித்து பெற்றோருக்கு தெரியாமல் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஏப்ரல் 13ம் தேதி குழந்தை இறந்து விட்டதாக கூறிய பெற்றோர் கஸ்தூரியின் சொந்த ஊரான பொட்டிரெட்டிப்பட்டி சுடுகாட்டில் புதைத்துள்ளனர். குழந்தை இறந்த தகவல் அறிந்ததும் சுகாதார்த்துறை சார்பில் எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முடிவெடுத்தனர்.

அரசு மருத்துவர்கள் அசோக்குமார், திருநாவுக்கரசு தலைமையில் நல்லிப்பளையம் காவல் ஆய்வாளர் உமா பிரியதர்சனி மற்றும் சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலையில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவது பிறந்ததும் பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டதா அல்லது உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments