தொழிலதிபரின் சொத்தை அபகரிக்க முயற்சி..! டிஎஸ்பி வேடம் போட்டு மிரட்டிய காவலர் கைது

0 3465
தொழிலதிபரின் சொத்தை அபகரிக்க முயற்சி..! டிஎஸ்பி வேடம் போட்டு மிரட்டிய காவலர் கைது

சென்னையில் தொழிலதிபரின் சொத்தை அபகரிக்க, காவலர் ஒருவர் தன்னை கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனக்கூறி வீடு புகுந்து போலி வாரண்ட் மூலம் மூதாட்டியை கைது செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரி போல் சீருடை அணிந்து மிரட்டிய காவலரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கும் சங்கர் குழும நிறுவனங்களின் உரிமையாளர் உன்னிதன், இவரது மனைவி 85 வயதான ஸ்ரீதேவி உன்னிதன் ஆகியோர் சென்னை அண்ணாநகர் 6-வது நிழற்சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னை ஸ்பெஷல் கிரைம் பிராஞ்ச் டிஎஸ்பி என கூறிக் கொண்டு அடியாட்கள் போலிருந்த நான்கு பேருடன் வீட்டிற்குள் நுழைந்த நபர் காவல் துறை அதிகாரிக்கான சீருடையில் இருந்துள்ளார். 85 வயதான மூதாட்டி ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்ய வந்திருப்பதாகக் கூறி அதற்கான வாரண்டை காண்பித்துள்ளார்.

மூதாட்டியின் பேரன் சைலேஷ் அது போலியான வாரண்ட் என கண்டுபிடித்ததால், உடனே போலீசாருக்கு தெரிவிக்க அண்ணா நகர் போலீசார் விரைந்து வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் உடன் வந்த அடியாட்கள் ஆட்டோவில் தப்பி விட, உயரதிகாரி போல் உடையணிந்த நபர் சிக்கிக் கொண்டார். முதலில் விசாரிக்க வந்த அண்ணா நகர் போலீசாரிடம், தான் யார் தெரியுமா ஸ்பெஷல் பிராஞ்ச் உயர் அதிகாரி, தனக்கே விசாரணையா? என்று மிரட்டல் தொணியில் பேச, அவரை நாற்காலியில் அமர வைத்து விசாரித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் நடந்த இடம் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என கூறி அங்கு ஒப்படைத்தனர். அங்கும் சுமார் 2 மணி நேரம் தான் அதிகாரி என சலம்பல் செய்த அந்த நபரின் பெயர் டேவிட் ஆனந்தராஜ் என்பதும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது. 2018- ஆம் ஆண்டு முதல் டேவிட் ஆனந்த் ராஜ் பணிக்கு செல்லாமல் விட்டோடியாக இருந்துள்ளார்.

தொழிலதிபர் உன்னிதன் குடும்பத்திற்கு சொந்தமாக அம்பத்தூர் அருகே 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. அதற்கு அருகில் உள்ள இடம் தலைமை காவலர் டேவிட் ஆனந்த் ராஜூக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. கடந்தாண்டு ஊரடங்கின் போது, உன்னிதன் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த கட்டிடத்தை ஆக்கிரமித்து டேவிட் ஆனந்த்ராஜ் அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வாட்ச்மேனை தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டேவிட் ஆனந்த் ராஜ், அதன் பிறகு பிணையில் வந்து உன்னிதன் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளார். அந்த நிலத்தில் உள்ள கட்டிடத்தில் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு பயங்கர ஆயுதங்களை போட்டு வைப்பது, இறந்த மாட்டின் சடலத்தை கட்டடத்திற்கு கீழே புதைத்து வைப்பது என வினோதமாக மிரட்டி வந்த டேவிட் ஆனந்த் ராஜ் இறுதியில் உயர் அதிகாரி போல் வேடமிட்டு வீடு புகுந்து சோதனை செய்வது போல, அபகரிக்க முயன்ற நிலத்தின் ஆவணத்தை எடுக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமை காவலர் டேவிட் ஆனந்த் ராஜ் மீது கொலை மிரட்டல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments