சின்னப் பொண்ணும் சீறிய பெண் போலீசும்..! மாஸ்க் வேட்டையால் வாய் சண்டை

0 24318
சின்னப் பொண்ணும் சீறிய பெண் போலீசும்..! மாஸ்க் வேட்டையால் வாய் சண்டை

சாலையில் எச்சில் துப்பியவருக்கு 500 ரூபாய் அபராதம் போட்டு சிங்கபூராய் மாறி இருக்கின்றது திருச்செந்தூர். கறார் வசூலால் முககவசம் அணியாத குட்டிச் சிறுமியோடு வாய்ச்சண்டை போடும் பரிதாப நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் உள்ளிட்டோருக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு குறிப்பிட்ட கோடிகளை வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூல் செய்யப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் நாளொன்றுக்கு குறைந்தது 100 வழக்குகளாவது பதியப்பட வேண்டும் என உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனால் திருச்செந்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் தீவீர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் பரவாயில்லை மாஸ்க் இல்லாமல் போனால் அபராதம் தான்..!

ஒரு காலத்தில் சிங்கப்பூரில் தான் சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது திருச்செந்தூர் சாலையில் எச்சில் துப்பியதால் அனாமத்தாக 500 ரூபாயை அபராதமாக கட்டும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த வள்ளல்..!

இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என பாரபட்சம் பார்க்காமல் மடக்கி, முகக்கவசம் அணியவில்லை என்றால் உடனடியாக 200 ரூபாய் அபராதம் விதித்தனர். ஒரு வேனை மடக்கி அபராதம் வசூலிக்க முயல அலர்ட்டான பெண்கள் அவசர அவசரமாக மாஸ்க் போட்டு லாவகமாக தப்பினர்.

பேருந்தை மறித்து சோதனை நடத்த, இளம் அலார்ட் ஆருமுகம் ஒருவர் கர்சீப்பை தற்காலிக முகமூடியாக்கினார் அப்படியே அவரை கீழே இறக்கி ரூ 200 அபராதம் விதித்தனர். சிலர் 200 ரூபாய் இருந்தால் ஆட்டோவில் போயிருப்போமே என்று அபராதம் கட்ட இயலாமல் புலம்பியதால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்

ஒரு காரில் சென்ற சிறுமியிடம், முக கவசம் அணியவில்லை என்று 200 ரூபாய் அபராதம் விதித்த பெண் போலீஸ் ஒருவர், அவரது தந்தையிடம் இருந்து பணத்தை வசூலிக்க காண்டான அந்த சிறுமியோ , காரில் செல்லும் நாங்கள் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டு போலீசாரிடம் மல்லுக்கு நின்றார். அந்த பெண் போலீஸ் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல இருவரும் வாய் சண்டை போட்டுக் கொண்டனர்.

மற்றொரு புறம் டீ கடை முதல் வணிக வளாகங்கள் வரைக்கும் சென்று வழக்குபதிவு செய்யும் போலீசார், வழக்குப்பதிவுக்கு இலக்கு வைத்திருப்பதால் தங்களுடன் வாக்குவாதம் செய்வோரையும் சமாளித்து அபராதத்தை வசூல் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments