ஒட்டுத் துணியில்லாம புதையலை நம்பி ரூ 22 லட்சம் புகை..! போலி சாமியார் ஜாலி..!

0 60823
ஒட்டுத் துணியில்லாம புதையலை நம்பி ரூ 22 லட்சம் புகை..! போலி சாமியார் ஜாலி..!

திண்டுக்கல் அருகே தங்க புதையல் எடுத்து தருவதாக வீடியோவில் படம் காண்பித்த போலிஜோதிடரை நம்பி உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் பூஜை செய்து 22 லட்சம் ரூபாயை பறி கொடுத்துள்ளார் தொழில் அதிபர் ஒருவர். புதையல் ஆசையால் உருவான மோசடி பூதம் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தொழிலில் நஷ்டம் எனக்கூறி 22 லட்சம் ரூபாயை போலி ஜோதிடருக்கு அள்ளிக்கொடுத்த வள்ளல் விவசாயி தங்கவேல் இவர்தான்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள அரியபித்தன்பட்டியை சேர்ந்த வசதியான விவசாயியான தங்கவேல், தனக்கு தொழில் நட்டம் ஏற்பட்டு விட்டதாக திருப்பூர் மாவட்டம் கனியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமாரை அனுகியுள்ளார்.

இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு வந்த சாமியார் சசிகுமார் பூஜை செய்துள்ளார். அந்த பூஜைக்கு கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வரை தங்கவேலிடம் இருந்து கறந்துள்ளார். அத்தோடில்லாமல் புதையல் எடுத்துக் கொடுப்பதில் தான் எக்ஸ்பெர்ட் எனக்கூறி சில வீடியோக்களையும் ஜோதிடர் சசிக்குமார், தங்கவேலிடம் காண்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து 2 நாட்கள் கழித்து சசிகுமார் மீண்டும் தங்கவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது தங்கவேலின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

புதையலை எடுப்பதற்கு மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொழில் நஷ்டத்தில் இருந்த தங்கவேல் குடும்பத்தினர் புதையல் கதையை நம்பி விட்டனர். அதை பயன்படுத்தி கொண்ட ஜோதிடர் சசிகுமார் புதையல் எடுக்கும் பூஜைக்கு என்று கூறி பலமுறை பணம் வாங்கியுள்ளார்.

அந்த வகையில் தங்கவேலிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் வரை சசிகுமார் கறந்ததாக கூறப்படுகின்றது. தங்கவேலின் மனைவி மற்றும் மருமகளிடம் புதையல் தொடர்பாக பேசி ஆசை காண்பித்து 44 சவரன் நகைகளையும் சசிகுமார் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி புதையல் இருப்பது போன்ற புகைப்படங்களை காண்பித்து அதை எடுத்து தருவதாக கூறி கார், புல்லட் மோட்டார் சைக்கிள், விலைஉயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் சசிக்குமார் வாங்கி கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆனால், பேசியபடி புதையல் எதுவும் எடுத்து கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த தங்கவேல், சசிகுமாரை சந்தித்து கேட்டனர். உடனே மறுநாளே வந்து புதையல் எடுத்து தருவதாகவும், புதையல் கிடைக்காவிட்டால் பணம், நகைகள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை திரும்பத் தந்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

அதன்படி தங்கவேல் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் வந்த சசிக்குமார், தங்கவேல் வீட்டில் உள்ள ஒருவரை உடலில் ஒட்டுத்துணியில்லாமல் நிற்க வைத்து பூஜை செய்துள்ளார். இறுதியில் புதையல் எடுத்து கொடுக்காமல், மாந்திரீகம் செய்து கை, கால்களை செயல்படாமல் முடக்கி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து தங்கவேல் உறவினர்களுடன் சென்று சசிகுமாரை சந்தித்து பணம், நகைகள், பொருட்களை கேட்டார். இதனால் கார், மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் 2 லட்சம் ரூபாயை சசிக்குமார் கொடுத்ததாக கூறப்படுகின்றது.

தங்கப்புதையலை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தங்கவேல் பணம் மற்றும் நகைளை மீட்டுத்தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்ட நிலையில் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் பானுமதி, ஜோதிடர் சசிகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் சசிகுமாரை கைது மேலும் ஜோதிடருடன் வந்து தங்கவேலை மிரட்டிய 4 பேரை தேடி வருகின்றனர்.

விவசாய நிலத்தில் உள்ள மண்வளமே பெரும் புதையல் தான் என்பதை உணராமல், சாதகமாக பேசி பணம் பறிக்கும் ஜோதிடர்களை நம்பி புதையல் எடுக்க முயன்றால் பல மோசடி பூதங்கள் வெளியே வரும் என்பதற்கு என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments