ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்ற தாய்... மீட்டெடுத்தப் பாட்டி.. சிக்கும் தொழிலதிபர்.!

0 4550

சேலத்தில் சிறுமியை பத்து லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக பெற்ற தாய் பேசிய செல்போன் உரையாடல் வெளியான நிலையில்,  சிறுமி, தொழிலதிபரிடம் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார். 

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. இவரின் 2 மகள்களில் ஒருவரான சுமதிக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். சுமதியின் கணவர் சதீஷ் கோழிக்கறி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். சுமதி வறுமையில் இருந்ததால் தனது 7 வயது சிறுமியை பாட்டி சின்ன பொண்ணுவிடம் விட்டு வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுமியை, அவரது தாயார் சுமதி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான கிருஷ்ணன் என்பவர் தனியாக வசிக்கும் நிலையில், அவரது வீட்டில் வேலைக்கு சுமதி சேர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையறிந்த சிறுமியின் பாட்டி சின்னப்பொண்ணு, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், தனது 7 வயது பேத்தியை வீட்டு வேலைக்கு அமர்த்தியதோடு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக பாட்டி சின்னப்பொண்ணு கூறியிருந்தார்.

மேலும்,தனது பேத்தியை தன்னிடம் காண்பிக்க கிருஷ்ணன் மறுப்பதாகவும் பாட்டி, தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில்
சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையே அந்த சிறுமியின் தாய் சுமதி, தனது உறவுக்கார பெண் ஒருவரிடம், 10 லட்ச ரூபாய்க்கு, அந்த பெண் குழந்தையை விற்றதாக, செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனது வீடு கனவு இதன்மூலம் நிறைவேறிவிட்டதாக சுமதி கூறுவதை, சகித்துக் கொள்ள முடியாமல், அந்த உறவுக்கார பெண், உனக்கு மனசாட்சியே இல்லையா என வசைபாடும் உரையாடலும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

10 லட்ச ரூபாய்க்கு பெற்ற மகளை விற்றதாக பெண் ஒருவரே கூறும் ஆடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து, சிறுமியின் தாய் சுமதியிடம், சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பாட்டி சின்னப்பொண்ணு, தனது பேத்தியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் கிருஷ்ணனிடமே சிறுமியை ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும், பாட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, 10 லட்ச ரூபாய்க்கு பெற்ற மகளை விற்றதாக கூறப்படும் சிறுமியின் தாய் சுமதி, அவரது கணவர் சதீஷ், 7 வயது சிறுமியை வீட்டில் வைத்திருந்த, ஜவுளி எற்றுமதி தொழில் செய்யும் கிருஷ்ணன் ஆகியோர் மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments