பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை... 4 பேர் மீது போக்சோ..!

0 12166
பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை... 4 பேர் மீது போக்சோ..!

சென்னையில் பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெறுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பின்னணி பாடகியாக உள்ள ஒருவர் தற்போது ஹைதாரபாத்தில் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்த நிலையில் அண்மைக் காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னையில் தங்கியுள்ள பாடகியிடம் அவரது மகள் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, கீழ்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கடந்த 8 ஆண்டுகளாக தனது தங்கை வீட்டில் வசித்து வந்த தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். தங்கையின் கணவர், அவரது உறவினர் மகன் மற்றும் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி ஆகியோரால் தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தனது தங்கையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதால் இவர்கள் நான்கு பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில், அந்த பாடகி குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கீழ்பாக்கம் மகளிர் காவல்நிலையப் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில், பாதிரியார் ஹென்றி மற்றும் பாடகியின் குடும்பத்தினர் மூவர் உட்பட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாடகியின் சகோதரியும் கிறிஸ்துவ மத பாடல்களை பாடும் பாடகி எனச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் பாதிரியர் ஹென்றியின் யூட்யூப் தளங்களில் கிறிஸ்துவ பாடல்களை பாடி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த புகார் தொடர்பாக பாதிரியார் உட்பட 4 பேரை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments