ஆசை 6 மாசம், மோகம் 3 மாசம்... மனைவி முழு மோசம்..! கணவன் கொலை பின்னணி

0 40417
ஆசை 6 மாசம், மோகம் 3 மாசம்... மனைவி முழு மோசம்..! கணவன் கொலை பின்னணி

கரூர் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டரை ஆண்டுகள் கழித்து, தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரியின் மனைவி , மாமியார் ஆகியோர் கொலைகார கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் அடுத்த பசுபதிபாளையம் முடக்குசாலை பகுதியில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கழுத்து அறுபட்ட நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடந்தது. அந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரித்த போலீசார் வழக்கை துப்பு துலக்க இயலாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இந்த நிலையில் கரூர் நகர டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற முகேஷ் ஜெயக்குமார், இந்த கொலை வழக்கை துப்புதுலக்க சிறப்புத் தனிப்படை ஒன்றை அமைத்தார். கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் விசாரித்த போது அந்த வகை மதுபாட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து கொலையான இளைஞர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொலையுண்ட இளைஞரின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் அடுத்த பெருமாள் பாளையம் சாலையில் கூல்டிரிங்க் கடை நடத்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் அதே ஊரை சேர்ந்த ஜெயலலிதா என்பவரின் மகளான அம்மு என்கிற அன்னலெட்சுமி என்பவரை திருமணம் செய்து திருப்பூருக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரது சொந்த ஊரில் சென்று விசாரித்த போது கணவர் சுப்புராஜ் வெளி நாடு சென்றிருப்பதாக மனைவி அன்னலெட்சுமி கூறியிருப்பது தெரியவந்தது.

கணவர் காணாமல் போன நிலையில் ஏன் போலீசில் புகார் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொய் சொன்னார் ? என்று போலீசார் விசாரித்த போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார். அன்னலெட்சுமி கொடுத்த தகவலின் பேரில் கரூரை சேர்ந்த கனகராஜ் என்பவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில் ஆசையும் மோகமும் சேர்ந்து சுப்புராஜை தீர்த்துக்கட்டிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருப்பூரில் கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வந்த சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கரூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சுப்புராஜ், தனது மனைவி அன்னலெட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் காதலுக்கு சுப்புராஜ் இடையூறாக இருப்பதாக நினைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ந்தேதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் மதுவாங்கிச்சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே மறைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவருக்கு போதை தலைக்கேறியதும், கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அன்னலெட்சுமிக்கும் தாய் ஜெயலலிதாவுக்கும் தகவல் தெரிந்தும் அவர்கள் அதனை மறைக்கும் விதமாக கனராஜை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக திருப்பூரில் வீட்டைக் காலி செய்து விட்டு காதலன் உடன் கரூருக்கே சென்று 6 மாதம் குடித்தனம் நடத்தியுள்ளனர். ஊரில் தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாக நடித்து வந்த கனகராஜ் ஒரு கட்டத்தில் ஆசை தீர்ந்து விட இவர்களை விரட்டியுள்ளான் , பின்னர் தாயும் மகளும் குழந்தைகளுடன் பிழைப்பு தேடி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர்.

இங்குள்ளவர்களிடம் தனது கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறி சமாளித்துள்ளார் அன்னலெட்சுமி..! இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலெட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

மது பாட்டில் சீரியல் நம்பர் என்ற சிறு தடயத்தின் மூலம் இந்த கொலை வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments