குஜராத்தில் இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்..!

0 1339

கொரோனா தொற்றால் உயிரிழந்த தாயின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி தராததால் தள்ளுவண்டியில் வைத்து மகன் எடுத்து சென்ற அவலம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்பட்டுத்தப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தினசரி பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. ஏப்ரல் 11ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நாடு முழுவதிலும் கொரோனா தடுப்புசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை மக்களே முன் வந்து செலுத்தி கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அவரது மகன் தள்ளு வண்டியில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஆல்பாட்கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்ய மகனும், உறவினர்களும் வந்துள்ளனர். கொரோனாவால் இறந்த அந்த முதாட்டியின் உடலை எடுத்து செல்ல வாகனங்கள் ஏதும் இல்லாததால் நான்கு சக்கர தள்ளுவண்டியில் கிடத்தி போட்டு மூதாட்டியின் மகனும், உறவினர் ஒருவரும் தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர். முகக்கவசம் மட்டுமே அணிந்திருந்த அந்த இருவரும் வேறு எந்த பாதுகாப்பு உடையையும் அணிந்திருக்கவில்லை. தனது தாயின் உடலை எடுத்து செல்ல உள்ளூர் நிர்வாகத்திடம் அமரர் ஊர்த்தி கேட்டும், அவர்கள் தர மறுப்பு தெரிவித்துவிட்டதாக மூதாட்டியின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா தொற்றின் பரவல் தீவிரம் அடைந்து வரும் இந்த சூழலில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை எந்தவித பாதுகாப்பும் இன்றி எடுத்து செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments