வீட்டு வாசலில் மந்திரித்த முட்டைகள்... தொடரும் சோகம் ... அச்சத்தில் ஊர்மக்கள்!

0 8161

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மர்ம நபர்கள் சிலர் மாந்திரீகம் செய்து முட்டையை வீட்டு வாசலில் வீசி செல்வதால், ஊருக்குள் 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாகவும், ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச்சாவடி அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர்கள் தக்ஷிணாமூர்த்தி - பொன்னியம்மாள் தம்பதி. இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி என்று இரு மகள்களும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை நாள் அன்று தட்சிணாமூர்த்தியின் வீட்டு வாசலில் , படங்கள் வரைந்து, மஞ்சள் குங்குமம் இட்டு மந்திரித்த முட்டை காணப்பட்டுள்ளது. இதேப்போல ஒவ்வொரு அம்மாவாசை நாள் அன்றும் தட்சிணாமூர்த்தியின் வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை காணப்பட்டுள்ளது.

இதனால் சமீப காலமாகவே, தட்சணாமூர்த்தியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. . இந்த நிலையில், அந்த முட்டையை தொட்ட தட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் சுஜாதா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். எந்த ஒரு நோய் நோடியும் இல்லாத இளம் பெண் சுஜாதா, எப்படி உயிரிழந்தார் , என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதேபோல் அதே ஊரை சேர்ந்த இன்னும் சிலரின் வீட்டு வாசல்களிலும் மாந்திரீக முட்டை காணப்பட்டதாகவும், அவ்வீட்டை சேர்ந்தவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடுமையான இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாந்திரீக முட்டைகளை வீட்டு வாசலில் வீசி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊரில் வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மாந்திரீக சம்பவத்தில் பலியான சுஜாதாவின் தந்தை தக்ஷிணாமூர்த்தி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊர்மக்களை பாதுக்காக்க வேண்டும் என்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஞ்ஞான யுகத்தில் மனிதன் எண்ணற்ற வளர்ச்சிகளை நாளுக்கு நாள் அடைந்தாலும், இதுப்போல மாய மாந்திரீக குறித்தான மூடநம்பிக்கைகளும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

எது எப்படியோ, ஊர் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி மாந்திரீக முட்டைகளை வீசிச் செல்லும் அந்த கூமுட்டை யார் என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே இதற்கான விடை தெரிய வரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments