மேற்குவங்கத் தேர்தல்: துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..!

0 3696
மேற்குவங்கத் தேர்தல்: துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..!

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்டத் தேர்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மத்தியப் படையினர் சுட்டுக்கொன்றதாகத் திரிணாமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அந்தச் சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கூச்பிகார், அலிப்பூர்துவார், தெற்கு 24 பர்காணாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 5 மாவட்டங்களில் பரவியுள்ள 44 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்தியத் துணைராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஹூக்ளியில் பாஜக வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு நின்ற மத்தியப் படையினர் வன்முறையாளர்களைத் தடுத்து விரட்டினர். இந்த நிகழ்வின்போது ஊடகத்துறையினரின் வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

கூச்பிகார் மாவட்டத்தில் மாதாபங்கா என்னுமிடத்தில் பாஜகவினர், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மத்தியப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் வாக்களிக்க வரிசையில் நின்ற இளைஞர் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர். இதேபோல் சித்தல்குச்சி என்னுமிடத்தில் பாஜகவினர் - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டபோது மத்தியப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

சித்தல்குச்சியில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததால் தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கையின்படி 126ஆவது சாவடியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வந்த அப்பாவிகள் 4 பேர் மத்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறித் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments