"மம்தா தோற்பார் என பிரசாந்த் கிஷோரே சொல்லலாமா..?" - கொதிக்கும் திரிணாமுல் கட்சியினர்!

0 17935
பிரசாந்த் கிஷோர் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜிக்கு அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரே, சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் எனச் சொல்லி இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட சட்டசபை தேர்தலில், மேற்கு வங்கத்தில் மட்டும் இன்னும் 4 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. இந்த தேர்தலில், திமுகவுக்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது. அதேபோன்று, மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாந்த் கிஷோரே, தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு வந்தார்.

இந்த தேர்தலில், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் பிரசாந்த் கிஷோரோ, பாஜக ஆட்சி அமைக்காது என்றும், அந்த கட்சிக்கு அதிகம் போனால் 100 இடங்களே கிடைக்கும் என்றும் கூறி வந்தார். மேலும் மம்தா மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றும் அடித்துச் சொல்லி வந்தார்.

 இதனிடையே மேற்கு வங்கத்தில் இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், சட்டசபை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிளப் ஹவுஸ் உரையாடல் ஒன்றில், " மேற்குவங்கத்தில் மோடிக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உருவாகியுள்ளது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாடு முழுவதும் மோடி அலை தென்படுகிறது. மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருக்கிறது. எனவே பாஜக தான் வெற்றி பெறப் போகிறது. மேற்குவங்கத்தில் 27 சதவீதம் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் மோடிக்குத்தான் விழப் போகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் இடதுசாரிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் வேலையைத்தான் செய்திருக்கின்றன" என்று அதில் பிரசாந்த் பேசி உள்ளார்.

இந்த ஆடியோ, பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில அரசியல் வட்டாரம் அதிர்ந்து போனது. மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வேலை பார்த்து வரும் பிரசாந்த் கிஷோரே இப்படி பேசி உள்ளதன் மூலம், அடுத்து ஆட்சி அமைக்கப் போவது நாங்கள்தான் என பாஜகவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, "நமக்காக தேர்தல் வேலை பார்ப்பதாக கூறிவிட்டு, இப்படி பாஜக வெற்றி பெறும் எனச் சொல்கிறாரே...!" என பிரசாந்த் கிஷோர் மீது செம கடுப்பில் உள்ளனர்.

 ஆனால், பிரசாந்த் கிஷோரோ, அந்த ஆடியோவில் இருப்பது தனது பேச்சுதான் என்றாலும், குறிப்பிட்ட பகுதி பேச்சை மட்டுமே பாஜகவினர் லீக் செய்துள்ளதாகவும், முழு பேச்சையும் வெளியிட தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் அவரது இந்த விளக்கத்தை மம்தாவும், அவரது கட்சியினரும் ஏற்பதாக இல்லை எனத் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments