2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..! போலீசாரின் முகமூடி வசூல்

0 12425
2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..! போலீசாரின் முகமூடி வசூல்

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளதாகக் கூறி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினர் இருளில் நின்று கார்களை மறித்து கறார் வசூலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 296 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், 79 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்ற நபர்களால் தான் தூத்துக்குடியில் கொரோனா பரவுவதாக கருதி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் முகக்
கவசம் அணியாதவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த உத்தரவை மாவட்ட காவல்துறை மூலம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார், கூட்டம் அதிகமாக கூடுகின்ற பஜார் பகுதிகளில் முககவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, தங்கள் காவல் நிலையத்துக்கு அருகே இருள் சூழ்ந்த பகுதியில் கையில் சிகப்பு விளக்கை வைத்து கார்களை மறித்து ஹெல்மெட்டிற்கு செய்தது போன்று தற்போது முககவசத்தை காரணம் காட்டி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்களை மடக்கி காரில் எத்தனை பேர் முக கவசம் அணியாமல் இருக்கின்றார்களோ, அவர்களிடம் நோக்கம் போல வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டு முன் வைக்கப்படுகின்றது. காரில் செல்லும் 2 பேருக்கு 200 ரூபாய் என்றும் 5 பேர் என்றால் 5 ஆயிரம் ரூபாய் என்றும் கூறி சில போலீசார் கறார் வசூலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அரசு அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி போலீசார் பணத்தை வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். அபராதம் செலுத்தினால் கொரோனா பரவாதா ? என்று ஆதங்கப்படும் வாகன ஓட்டிகள், குறைந்தபட்சம் போலீசார் அபராதத்தை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு முககவசம் வழங்கினாலாவது ஆறுதலாக இருக்கும் என்கின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் என்று பலமுறை எடுத்துச்சொல்லியும் மக்கள் அதனை பின்பற்ற மறுத்ததால் தேர்தல் முடிந்த கையோடு இந்த கெடுபிடி நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் அபராதம் வசூலிப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் பேசும் போது முக கவசத்தை சரியாக அணிய வேண்டும் என்ற முன்யோசனை இல்லாமல் செயல்படும் காவல் துறையினருக்கு எல்லாம் கொரோனா பரவாதா ? என்றும் இவர்களிடம் அபராதம் வசூலிப்பது யார் ? என்றும் வாகன ஓட்டிகள் வினா எழுப்புகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments