சென்னையில் கட்டுப்பாடு... மீறினால் அபராதம்..!

0 5228

சென்னை மாநகராட்சி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகளை விதித்துள்ள, மாநகராட்சி, இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், முக கவசம் முறையாக அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது இடத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சலூன்கள், அழகு நிலையங்கள், “ஜிம்”கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு 500 ரூபாயும், வாகனம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினமும் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கவும், அண்ணாநகர் மண்டலத்தில் தினசரி 1 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கவும், இதே போல சென்னை மாநகராட்சி முழுவதிலும் மொத்தமுள்ள 15 மண்டலங்களிலும் தினமும் 10 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments