”தந்தை வாழ்ந்த காட்டில் புதையல் உள்ளது!” - வீரப்பன் மகள் விஜயலட்சுமி

0 28146

சென்னை விருகம்பாக்கத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் இளைய மகள் விஜயலட்சுமி நடிக்கும் 'மாவீரன் பிள்ளை' படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

சந்தனக் கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரது மகள் சினிமாவில் நடிகையாக வலம் வர காத்திருக்கிறார் என்ற செய்தி, சினிமா வட்டாரத்தில் ‘ஹாட் டாப்பிக்’.

வீரப்பனுக்கு வித்யாரானி, விஜயலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி, தற்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ‘மாவீரன் பிள்ளை’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்க, அவரே கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரில், வீரப்பனின் மகள் விஜயலட்சுமி துப்பாக்கி ஏந்திய படி நிற்கிறார். போஸ்டரில் உள்ள வீரப்பனின் மகள் புகைப்படத்தையும், வீரப்பன் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய வீரப்பனின் மகள் , மாவீரன் பிள்ளை படமானது சாதிய படமாக சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது . ஆனால் இது முழுக்க முழுக்க சமூக அவலங்களை எடுத்துக் கூறும் படம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மதுவிலக்கு, விவசாயிகளின் தற்போதைய போராட்டங்கள் முழுவதுமாக படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனது அப்பாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டுமே அவரது புகைப்படத்தைப்போலவே போஸ்டரில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதாகவும், அவரின் வாழ்க்கை கதைக்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது, வீரப்பன் வாழ்ந்த காட்டில் பண புதையல் இருப்பதாக கூறப்படும் தகவல் உண்மையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பதிலளித்த அவர் கண்டிப்பாக இருக்கிறது எனவும் அது உயிரிழந்த அப்பாவிற்க்கும், அப்பாவின் நெருங்கிய நண்பரான கோவிந்தனுக்கு மட்டுமே தெரியும் எனவும் தெரிவித்தார். இருவரும் இப்போது உயிரோடு இல்லை, ஆனால் நிச்சயம் புதையல் இருக்கிறது எனவும் கூறினார். இந்த சந்திப்பின் போது படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான கே.என்.ஆர்.ராஜா உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments