தாயும் விரட்ட... தந்தையும் கைவிட... மனமுடைந்த அண்ணன்- தங்கை எடுத்த விபரீத முடிவு!

0 18811
பெற்றோரால் கைவிடப்பட்ட இளைஞர்

தந்தையும் தாயும் கைவிட்டதால் மனமுடைந்த அண்ணன் தங்கை இருவரும் விஷமருந்தி சாலையில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கரந்தை சறுக்கை பகுதியை சேர்ந்த கனகராஜ்- காந்திமதி தம்பதிக்கு கரன்ராஜ் என்ற மகனும் இந்துமதி என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று கணவரை விட்டு காந்திமதி பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகனும், மகளும் தாயிடத்தில் வளர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால், தந்தை வீட்டுக்குச் சென்று வாழுமாறு கந்திமதி மகன் , மகளை விரட்டியதாக கூறப்படுகிறது.

தாயார் வீட்டை விட்டு விரட்டியதால், தந்தை கனகராஜிடத்தில் இருவரும் சென்றுள்ளனர். ஆனால், கனகராஜ் தன் மகன், மகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் சொத்துக்களை அபகரிக்க வந்துள்ளதாக போலீஸாரிடத்தில் பெற்ற குழந்தைகள் மீதே புகாரளித்துள்ளார். மேலும், போலீஸை வைத்து தன் குழந்தைகளை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

தாயும் தந்தையும் விரட்டி விட்டதால் திக்கு தெரியாமல் தங்க வசதியும் இல்லாமல் சகோதரனும் சகோதரியும் கண் கலங்கி நின்றுள்ளனர். பின்னர், சாக முடிவெடுத்து அண்ணன் - தங்கை இருவரும் விஷம் வாங்கி குடித்து விட்டு கீழவாசல் பகுதியில் மயங்கி விழுந்து கிடந்தனர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்களை பார்த்துள்ளோம். ஆனால், சுயநலத்துக்காக வாழும் பெற்றோரை இப்போதுதான் பார்ப்பதாக தஞ்சை மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments