சென்னை : வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்கு அர்ப்பணிப்பு ... ரூ.10க்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கோபால் மரணம்!

0 3226

சென்னை வண்ணாரப்பேட்டை பாலு முதலி தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த பிரபல மருத்துவர் கோபால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர் மருத்துவர் கோபால். இவர் சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை முடித்தார். பின்னர் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும் , மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற மருத்துவர் கோபால், கடந்த 1969ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறியதாக கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தொடங்கினார்.

தொடக்க காலத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த கோபால் 1976-ஆம் ஆண்டு முதல் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கினார். அதனை தொடர்ந்து 5 ரூபாய் சில்லரை தட்டுப்பாடு ஏற்படவே, மக்கள் தாங்களாகவே முன்வந்து அவருக்கு பத்து ரூபாய் வழங்கி , மருத்துவம் பார்த்து வந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளையும் கோபால் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் துணைவியாரை இழந்த மருத்துவர் கோபால் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது கிளீனிக்கில் தங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்த 77 வயதான மருத்துவர் கோபால், உடல்நல குறைவு காரணமாக அதிகாலை உயிரிழந்தார்.

ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து உயிரிழந்த மருத்துவர் ஜெயச்சந்திரனின் மறைவு மக்களிடையே நீங்காமல் உள்ளது. இந்த நிலையில், 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலின் உயிரிழப்பு, வண்ணாரப்பேட்டை மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சிறிய காய்ச்சல் என்றாலே , பணத்தை பதம் பார்த்து விடும் சில மருத்துவர்கள் , மருத்துவமனைகளுக்கு மத்தியில், ஜெயசந்திரன், கோபால் போன்ற மருத்துவர்கள் தனி சிறப்பு மிக்கவர்களே.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments