சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் - சென்னை மாநகராட்சி

0 4097

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில், சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாவிட்டால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்க, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவும், குறைந்தபட்ச 6 அடி தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகள், அலுவலகம், வணிக வளாகங்களின் முகப்புவாயிலில் கிருமி நாசினி வைத்திருக்கவும், பணியிடங்களை கிருமி நாசினியால் அடிக்கடி சுத்தம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை 2 முறைக்கு மேல் மீறும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு 500 ரூபாயும், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாயும், தனிநபர் இடைவெளியை மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறும், முடிதிருத்தகங்கள், ஜிம், வணிக வளாகங்களுக்கு 5000ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதோரிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் நாள்தோறும் தலா ஒன்றரை லட்சம் ரூபாயும், கோடம்பாக்கம் மண்டலத்தில் நாள்தோறும் ஒன்றேகால் லட்சம் ரூபாயும், அண்ணா நகர் மண்டலத்தில் 1 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments