ரூ 3 லட்சத்துக்காக பீகார், பாட்னாவுக்கு ஆம்னி பஸ் சர்வீஸ்..! திரும்ப இயலாமல் ஓட்டுனர்கள் தவிப்பு

0 28413
ரூ 3 லட்சத்துக்காக பீகார், பாட்னாவுக்கு ஆம்னி பஸ் சர்வீஸ்..! திரும்ப இயலாமல் ஓட்டுனர்கள் தவிப்பு

 கோவை மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து வட மாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்துகள் தமிழகம் வர பயணிகள் இல்லாததால் ஊர் திரும்ப வழியில்லாமல் 25 நாட்களுக்கும் மேலாக பேருந்துடன் ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர்.

கோவை மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் கடந்த மாதம் 15 ந்தேதி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இங்குள்ள ஆலைகளில் வேலை பார்த்து கை நிறைய கிடைத்த பணத்துடன் ரெயில் கிடைக்காமல் தவித்தவர்களை கோழி குஞ்சு போல அமுக்கிய புரோக்கர்கள் சிலர், தனியார் ஆம்னி பேருந்து அதிபர்களை சந்தித்து, பீகாரிலிருந்து தமிழகம் வருவதற்கு நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து கிடைக்காமல் காத்திருப்பதாகவும், இங்கிருக்கும் தொழிலாளர்களை அங்கு கொண்டு சேர்த்துவிட்டு அவர்களை அழைத்து வந்தால் ஒரு டிரிப்புக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் போய் வருவதற்கு 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பி புரோக்கர்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு, ஆம்னி பேருந்தில் வட மாநில பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். ஓட்டுனர்களுக்கு ஒருவார சாப்பாட்டு படி மட்டும் கொடுத்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற நிலையில், அங்கு ஒரு பயணி கூட தமிழகம் வருவதற்கு தயாராக இல்லாததால் நம்ம ஊர் ஓட்டுனர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாயினர். அங்கிருந்து பயணிகள் இல்லாமல் திரும்ப வேண்டாம் என்றும் டீசல் செலவு கட்டுபடியாகாது, ஒன்றிரண்டு நாட்கள் தங்கி இருந்து பயணிகளை ஏற்றி வாருங்கள் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கறாராக கூறியுள்ளனர்.

இதனால் 25 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை ஒரு பயணிகள் கூட ஆம்னி பேருந்தில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து தமிழகம் வர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் குறைந்த கட்டணத்திலோ, டிக்கெட் எடுக்காமலோ பயணித்தவர்கள் எப்படி ஆம்னி பேருந்தில் தமிழகம் வருவார்கள் ? என்ற சிந்தனை இல்லாமல் ஓட்டுனரை பேருந்து அதிபர்கள் இத்தனை நாட்களாக காத்திருக்க வைத்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சாப்பிடுவதற்கு கூட காசில்லாமல் அங்கு அவதிபடுவதாக பேருந்து உரிமையாளருக்கு எதிராக ஓட்டுனர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்

பேருந்தை இயக்கி சம்பாதித்து கொடுக்கும் ஓட்டுனருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் சாப்பாட்டிற்கு கூட பணம் அனுப்ப இயலாத பேருந்து அதிபர்களுக்கு, 3 கோடி ரூபாய் பஸ்ஸும், வெள்ளை சட்டையும் எதற்கு ? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இங்கிருந்து பயணிகளை அனுப்பி வைத்ததற்காக புரோக்கர்கள் பேருந்துக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது தங்கள் சங்கத்தில் இல்லாமல் தனித்து இயங்கக்கூடிய சில தனியார் பேருந்து அதிபர்களாக இருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்தனர்.

பாட்னாவில் பேருந்துடன் தவிக்கும் தமிழக ஓட்டுனர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு திரும்ப கோவை மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது

டூரிஸ்ட் என்ற பெயரில் வெளியூருக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்திற்கு முறையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லையெனில் இது போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments