காளஹஸ்தி: காணிக்கையை பிரிப்பதில் தகராறு... தலைமையும் துணையும் சஸ்பெண்ட் !

0 3231

காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதி முன்பு ஆரத்தி தட்டில் விழுந்த பணத்தை பங்கு பிரிக்க மோதிக் கொண்ட தலைமை மற்றும் துணை அர்ச்சகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உலக பிரசித்தி பெற்ற வாயு ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞான பிரசுண்ணாம்பிகை கோவில் உள்ளது. ராகு கேது பூஜைக்கு இந்த தலம் புகழ் பற்றது. இங்கு தலைமை அர்ச்சகராக சம்பந்தம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆம் தேதி இவருக்கும் துணை அர்ச்சகரான கருணா குருக்களுக்கும் சம்பந்தத்துக்குமிடையே மூலவர் சன்னதியில் கற்பூர ஆரத்தி வழங்கும் போது பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கையை பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் பக்தர்கள் மத்தியிலேயே சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், பக்தர்கள் முகம் சுளித்தனர். இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் பக்தர்கள் முன்னிலையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பக்தர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு அர்ச்சகர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து, தலைமை அர்ச்சகர் சம்பந்தம் மற்றும் துணை தலைமை அர்ச்சகர் கருணா குருக்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து செயல் அதிகாரி பெத்தராஜு உத்தரவிட்டார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆரத்தி தட்டில் காணிக்கை போடுபவர்களுக்கு மட்டுமே ஆரத்தி வழங்கப்படுவதாகவும் இல்லாவிட்டால் பக்தர்களை துரத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது, ஆரத்தி தட்டில் விழக்கூடிய பணம் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதல் சஸ்பெண்ட் வரை சென்றுள்ளது பக்தர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments