கடவுள் சிலை இல்லாத கோவில்... துயரத்தின் சான்றாக அடிபம்பு!- ஒடிசாவில் கண்ணீர் வரவைக்கும் பரிதாப கிராமங்கள்

0 23329
மண்ணில் புதைந்து கிடக்கும் அடிபம்பு

அஜித் நடித்த 'சிட்டிசன்' படத்தில் 'அத்திப்பட்டி' என்ற கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதே பாணியில் ஒடிசா மாநில வரைபடத்திலிருந்து காணாமல் போன 7 கடலோர கிராமங்களால், அப்பகுதி மக்கள் கால் வயிற்று கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் சந்திக்கும் பெரும் துயரங்கள், காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.

ஒடிசா கடலோர மாவட்டங்களில் ஒன்றான கேந்திரபாரா மாவட்டம் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாவட்டத்தின் செழிப்பான பகுதிகளில் ஒன்றாக இருந்தது சதாபயா என்ற ஊர். 7 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊரில், சுமார் 700 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.ஆனால், இன்று சதாபயா கிராமம், ஒரு தீவு போல தனித்து காட்சியளிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து காணப்படும்மணல் குவியல்கள். ஆங்காங்கே காணப்படும் பனை மரங்கள். மக்களால் கைவிடப்பட்டுச் சுற்றித் திரியும் கால்நடைகள் என பாலைவனம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது.

ஒரு காலத்தில் அந்தப் பகுதிகளில் மக்கள் வசித்ததன் அடையாளமாக கடலோரத்தை ஒட்டிய பகுதியில், மண்ணில் புதைந்து காணப்படும் அடிபம்பும், தெய்வ சிலை எதுவும் இல்லாமல் பாழடைந்து காணப்படும் கோயிலுமாக இயற்கை விட்டு வைத்த சில எச்சங்கள் மட்டுமே பார்வைக்கு தென்படுகின்றன.இன்று பாழடைந்து காணப்படும் கோயில், ஒரு காலத்தில் அந்த கிராம மக்களின் கொண்டாட்ட தலமாக திகழ்ந்திருக்கிறது. குறிப்பாக வார இறுதிநாட்களில், அந்த கிராமத்தினர் குடும்பம் குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்து, மன நிம்மதியுடனும், திருவிழா காலங்களில் மகிழ்ச்சியுடனும் திரும்பும் இடமாக இருந்துள்ளது. ஆனால், கடல் அரிப்பு காரணமாக இன்று இந்த கிராமங்கள் நீரில் மூழ்கியும், மணலால் மூடப்பட்டும், ஒடிசாவரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டன.image

அரசாங்கத்தின் வரைபடத்திலிருந்தே காணாமல் போன பின்னர், அந்த கிராமங்களை யார் வந்து எட்டிப் பார்ப்பார்கள்..? ஊரை விட்டு விலக்கி வைத்துவிட்டது போன்று கண்டுகொள்ளப்படாமல் போனதால், வேறு போக்கிடம் இன்றி அந்த கிராம மக்கள் தற்போது சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரேசன் கடை உட்பட எந்த ஒரு அடிப்படை தேவைக்கும் இந்த மக்கள், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு சென்றாக வேண்டும். அங்கு செல்வதற்கு ஒழுங்கான சாலை வசதியும் கிடையாது. கரடு முரடாக கற்களும் மண்ணும் நிறைந்து காணப்படும் ஒரு குறுகிய பாதைதான் அந்த மக்களுக்கான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சிரமங்களையும் பொருட்படுத்தாமல் சென்றாலும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆம்... வழியில் குறுக்கிடும் ஒரு சிறிய நீரோடையைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், அந்த நீரோடையில் முதலைகள் கிடப்பதால், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகச் செல்பவர்கள்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

விவசாயமும் மீன் பிடி தொழிலுமே இவர்களுக்கான வாழ்வாதாரமாக இருந்த நிலையில், மறுவாழ்வு முகாம் வாழ்க்கை அதனை பறித்துவிட்டது. இதனால் இவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. வருவாய் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே இந்த கிராம மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. அரசாங்கம் வழங்கும் சொற்ப தொகை, கால் வயிற்றுக் கஞ்சிக்கே போதுமானதாக இல்லை என இம்மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.image

இப்படி இடம்பெயர்ந்த மக்களில் ஒருவர், லெங்கா. 6 பேர் அடங்கிய இவரது குடும்பத்தினருடன் சேர்த்து, இந்த கிராமத்தில் வசித்த 571 குடும்பங்கள் மறுவாழ்வு முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மறுவாழ்வு முகாமுக்கு வந்துவிட்டாலும், லெங்காவால் அவரது சொந்த கிராமத்துக்குப் போகாமல் இருக்க முடியவில்லை. காரணம் அவர் வளர்த்து வந்த 20 எருமை மாடுகள் அந்த கிராமத்தில்தான் சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றன. யாரும் அவற்றைப் பிடித்துச் சென்று விடக்கூடாது என்பதற்காகவே, அவர் அவ்வப்போது தனது சொந்த கிராமத்துக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.

இந்த நிலையில், மறுவாழ்வு முகாம்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் சரிவர இல்லாததால், இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், ஊரை விட்டு வந்த துயரத்துடன் சேர்த்து, இன்னும் கூடுதலான சிரமங்களைச் சந்திக்கின்றனர். இளைஞர்கள் பலர், பிழைப்புத் தேடி கேரளா உள்ளிட்ட பல்வேறு நிலங்களுக்குச் சென்று விட்டனர்.

தற்போதைக்கு இவர்களின் ஒரே நம்பிக்கை, அரசாங்கம் வீடு கட்டிக்கொள்ள தருவதாக அளித்துள்ள சிறிய நிலமும், ஒன்றரை லட்ச ரூபாய் நிதி உதவியும்தான்.


அதையாவது ஒடிசா அரசாங்கம், விரைந்து அளிக்குமா எனத் தெரியவில்லை!

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments