புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!

0 753

புதுச்சேரியில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு மொத்தமாக ஆயிரத்து558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரமான விவிபேட் இயந்திரங்கள் லாஸ்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதலில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர், ஊர்காவல் படையினர், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவினர் என 4ஆயிரத்து811 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர, 40 கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ படையினரும் கண்காணிப்பு பணியில் களமிறங்குகின்றனர்.

இதனிடையே, நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதைஒட்டி, மாநில எல்லைகளில் வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளான அனுமந்தை, கோரிமேடு, மதகடிப்பட்டு முள்ளோடை பகுதிகளில் துணை ராணுவத்தினருடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி என இருமுனை போட்டி நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments