கொரோனா பாதிப்பில் உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா..! முதன்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

0 2970
கொரோனா பாதிப்பில் உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா..! முதன்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முறையாக ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்களின் தாக்கம் ஒரேநாளில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 793 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 97 ஆயிரத்து 894 பேருக்கு ஏற்பட்ட பாதிப்பே இதுவரை அதிகமாக இருந்து வந்தது. ஒரு கோடியே 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 477 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் திட்டங்கள் குறித்தும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மகாராஷ்டிராவுக்கு மத்தியக் குழுவை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கை மேலும் அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments