தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..! 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு..!

0 2035
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..! 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு..!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபசிற்குப் பிறகு 3998 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இத்தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரச்சாரம் மெல்ல மெல்ல விறுவிறுப்படைந்து உச்சக்கட்டத்தை அடைந்தது. பரபரப்பாக நடைபெற்று வந்த வாக்கு சேகரிப்பு நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தொகுதியை சாராத, வெளியூர்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், தலைவர்கள் உடனடியாக வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, லாட்ஜூகள், ஹோட்டல்கள், இன்னும்பிற தங்கும் விடுதிகளை கண்காணித்து, வெளியூர் ஆட்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொதுமக்களை வீடு, வீடாகச் சென்று சந்திக்க கூடாது என்றும், சிறியளவில் கூட கூட்டங்களை கூட்டக் கூடாது என்றும், வேட்பாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், அவற்றை கண்காணிக்கவும், பறக்கும்படையினரோடு, நிலையான கண்காணிப்புக் குழுவையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. மின்விநியோகத்தில் திடீர் தடையை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா நடப்பதாக, அரசியல் கட்சிகள் புகார் கூறியது குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

முக்கியச் சாலைகளில், சோதனைச் சாவடிகளை அமைத்து, வாகனத் தணிக்கையை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் இரவுபகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments