6-ம் தேதி வாக்குப்பதிவு.. இறுதி கட்ட பணிகள் தீவிரம்..!

0 1267

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெறும் சூழலில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணியானது நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது.

ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள், நாளைய தினம் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்ட இடத்திலிருந்து, தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லும். 

சேலத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டது. அவசர தேவைக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏதுவாக வாகனங்களில் மைக்கும் (Mic) பொருத்தப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 222 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடவுள்ள நிலையில், அவர்களுக்கான பணி ஆணைகளும், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களும் வழங்கப்பட்டன. 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல்துறையினருக்கு எந்தெந்த வாக்குச்சாவடி என குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையத்தில் ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச் சாவடி மையங்களில் உடல் வெப்ப பரிசோதனை கருவி, கிருமி நாசினி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments