தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.412 கோடிக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

0 1769
தமிழகத்தில் நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.412 கோடிக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை 412 கோடி ரூபாய் மதிப்புக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்குப் பணம் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை, வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை 412 கோடி ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை தொகுதியில் ஒரு வீட்டில் 91 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் 65 லட்ச ரூபாயும், சிவகாசி தொகுதியில் 45 லட்ச ரூபாயும், பாளையங்கோட்டை தொகுதியில் 12 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் 96 லட்ச ரூபாயும், சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு கோடியே முப்பது லட்ச ரூபாயும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஒருகோடியே 23 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 6 லட்ச ரூபாயும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments