சற்று நேரத்தில் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்..! வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்குசேகரிப்பு

0 287

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி காவேரிப்பட்டினம் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டப்பட்டி,ஏர்ஹள்ளி, பன்னிஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக அரசின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்‍. அப்போது பெண் தொண்டர் ஒருவர் நடனமாடி ஆதரவு திரட்டினார்‍.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கயல்விழி, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாலை 7 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில், பெரியகடைவீதி, அண்ணா சிலை, புதுமஜித் வீதி, பைரவன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளில், சென்னை R.K. நகர் அதிமுக வேட்பாளர் R.S. ராஜேஷ், வீடு, வீடாக சென்று, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்த வேட்பாளர், அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகளை கூறி, ஆதரவு திரட்டினார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடிக்கு ஆதரவாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கனகனந்தல் சாலை, ஆசனூர் சாலை, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு,வீடாக சென்று திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். திமுக தேர்தல் அறிக்கையின் துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி திமுக வேட்பாளர் பொன்முடிக்கு அவர்கள் ஆதரவு திரட்டினர்.

புதுச்சேரி திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். பேட்டை ரோடு சந்திப்பில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக வந்து தேரடி வீதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி எனக் குறிப்பிட்ட நட்டா, கடந்த 5 ஆண்டுகாலமாக மத்திய அரசைக் குறைகூறி, மாநில வளர்ச்சிக்கு எந்த திட்டங்களையும் நாராயணசாமி கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார்.

சென்னை ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஏராளமான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று ஐட்ரிம்ஸ் மூர்த்திக்கு ஆதரவு திரட்டினர்‍. அவர் சூரிய நாராயணன் சாலை, காசிமேடு கொடிமரத்து தெரு, A. J. காலணி, பெரிய தம்பி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார். 

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத், நல்லாத்தூர்,  ரெட்டிச்சாவடி,  மஞ்சகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக அரசின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் பாடுபடுவதாக அவர் உறுதி அளித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகரில் வாக்கு சேகரித்த அவர், மக்களிடையே வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இறுதிக் கட்ட தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தளவாய்பேட்டை, ஜம்பை, பெரிய மோளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றும் நடந்து சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.  

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார், வீதி வீதியாக நடந்து சென்று வாக்குசேகரித்தார். தொண்டர்கள் புடைசூழ, ஆடல் பாடல் மற்றும் மேளதாளங்களுடன் காமராஜர் நகருக்கு சென்ற அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்  கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல், DCW அலுவலக காலனி, அழகாபுரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். பெண்கள் மலர் தூவிய நிலையில், பூவால் அடிக்கிறீங்க.. பூவை மெதுவா போடனும் என சிரித்தபடியே கூறிய அவர், பூவை பெண்கள் மீது தூவிவிட்டார்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சீனிவாசனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.  லட்சுமி மில்ஸ் பகுதியில் தொடங்கிய இப்பேரணி மார்க்கெட் சாலை வழியே சென்று காமராஜர் சிலை முன்பு நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எஸ்.எம்.நகர், ஜே ஜே நகர், அண்ணா நகர், பாரதி நகர், எடத்தெரு,  அருந்ததியர் காலனி, பூண்டி சாலை, உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் கெளதம சன்னா இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி, மேல் கண்டிகை, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர், பானை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வெற்றி பெற்ற பின் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பழங்காநத்தம் சொக்கநாதர் தெரு பொன்மேனி பாண்டியன் நகர், துரைசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணிக் கட்சியினருடன் வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தேவாலயங்களில் வாக்கு சேகரித்தார் தசராப்பேட்டை, ஆரணி டவுண், சூரியகுளம், ஆற்றுப்பாலம், கார்த்திகேயன் சாலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தேவாலயங்களுக்கு சென்ற அவர், பாதிரியார்களிடம் ஆசிப்பெற்றும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வாக்குசேகரித்தார். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார். தனியார் அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில், சுமைப்பணி, ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களோடு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துரையாடினார். உடலை வருத்தி உழைக்கும் உழைப்பாளிகள் என்பதால் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் தாம் பெரிதும் மதிப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். உஞ்சனை, பூசலாகுடி , சித்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்த அவர் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார்.

கும்பகோணத்தில் அதிமுகவுடனான கூட்டணியில் முவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments