50 வருடம் கழித்து வந்த காதல் கடிதம்... மகிழ்ச்சியில் 82 வயது ராஜஸ்தான் முதியவர்!

0 5253
கடிதம் பெற்ற மகிழ்ச்சியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 82 வயது முதியவர்

50 வருடங்களுக்கு முன் பிரிந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனது காதலியிடம் இருந்து கடிதம் வந்தள்ள மகிழ்ச்சியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 82 வயது முதியவர் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

காதலுக்கு கண்ணில்லை என்று ஒரு கூற்று உண்டு. அதனை நிஜ வாழ்க்கையில் அனுபவித்து கொண்டாடி வருகிறார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 82 வயதான தாத்தா. 30 வயதில் தொலைத்த தனது முதல் காதல் முதுமை பூத்து குளிரை வெறுக்கும் இந்த வயதில் மீண்டும் முளைத்துள்ளதால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் இந்த காதல் மன்னன்.

ராஜஸ்தானில் 82 வயதான முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட கிராமமான குல்தாராவின் கேட்கீப்பராக பணிபுரிந்து வருகிறார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கேட்கீப்பராக கழித்த இந்த முதியவர் 50 வருடங்களுக்கு முன்பு தனது வாலிப வயதில் ராஜஸ்தானின் ஜெய்சால்மருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டூரிஸ்ட் கைடாக இருந்துள்ளார். கடந்த 1970ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த மரினா என்ற பெண்ணை முதன்முறையாக பார்த்துள்ளார். கண்டதும் இவருக்கு மரினா மீது காதல் பற்றிக் கொள்ள, 5 நாள் பயணத்தில் இருவருக்கும் இடையே பிரிக்க முடியாத அணையா காதல் உருவாகியுள்ளது.

5 நாள் பயணம் நிறைவடைந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி செல்லும் முன் இவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார் மரினா. அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற மரினாவுக்கும், இவருக்கும் இடையிலான 8800 கி.மீ தொலைவிற்கு உரம் ஊற்றியது இருவரின் காதல் கடிதங்கள். சில வாரங்களுக்கு பின் மரினா அவரை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்தார். இதனையடுத்து தனது குடும்பத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் நண்பர்களிடம் ரூ.30000 பெற்றுக்கொண்டு தனது காதல் கவியை பார்க்க ஆஸ்திரேலியா பறந்தார் கேட்கீப்பர். மூன்று மாதங்கள் மரினாவின் வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழந்த அவரிடம் ஆஸ்திரேலியாவிலேயே தங்க வேண்டும் என்று காதலியால் கட்டயாப்படுத்தப்பட்டார். ஆனால் தன் குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாத கேட்கீப்பர் கனத்த இதயத்துடன் மரினாவை விட்டு பிரிந்து வந்தார்.

இந்தியா வந்த கேட்கீப்பருக்கு அவரது வீட்டினர் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட 82 வயதான இந்த காதல் மன்னன் தற்போது யாரும் வராத குல்தாராவிற்கு கேட்கீப்பராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது முதல் காதலியான மரினாவிடமிருந்து காதல் கடிதம் வந்துள்ளது. இதனால் ஆனந்த அதிர்ச்சியில் நெகிழ்ச்சியடைந்த இந்த காவல் மனிதர், 50 வருடங்களுக்கு பிறகு வந்த தனது முதல் காதலி மரினாவின் கடிதத்தால் காதல் மனிதராக மாறியுள்ளார். மேலும் இவ்வளவு நாள்களுக்கு பிறகும் தன்னை மறக்காத மரினாவை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார் இந்த காதல் கண்ணன்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments