மதுரையில் மட்டும் எய்ம்ஸ் மருத்துமனை பணிகளைத் தொடங்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

0 1481

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துமனை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வடலூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும் போது, 15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததைச் சுட்டிக் காட்டினார். மற்ற எல்லா மாநிலங்களிலும் நிதி ஒதுக்கி, வேலையைத் தொடங்கி விட்டதாகக் கூறிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பதையும், ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று பிரதமர் கூறியதற்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தனது மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவர், எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

 மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என்றும், அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு போன்றவை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

 பூம்புகார் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும் என்று உறுதியளித்த ஸ்டாலின், பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய ஊர்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்புச் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments