திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் 10 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் ஐடி ரெய்டு

0 11018
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் 10 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் ஐடி ரெய்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இல்லம் உள்பட பல்வேறு இடங்களில் 10 மணி நேரத்திற்கு மேல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் ஆகியோர் குடும்பத்தினருடன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை துணை இயக்குனர் தலைமையில் 15 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் பரவத் தொடங்கியவுடன், சபரீசன் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்தனர்.

நீலாங்கரையில், சபரீசன் நண்பர் எனக் கூறப்படும் ஜி ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளரான மோகனின் மகனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளருமான கார்த்திக்கின் வீட்டிலும், காலை 8 மணி முதல் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதையறிந்து அப்பகுதியில் திரண்ட திமுகவினர், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருமான வரி சோதனை என்ற பூச்சாண்டிக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும், இதன் மூலம் திமுகவின் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுத்தி விடலாம் என மத்திய அரசு நினைத்தால் அது நிறைவேறாது என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments