திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை

0 5814

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் ஆகியோர் குடும்பத்தினருடன் நீலாங்கரையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல், அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திடீரென வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கிய நிலையில், அதுபற்றிய தகவல் பரவத் தொடங்கியவுடன், சபரீசன் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வரத்தொடங்கினர்.

சபரீசன் இல்லம் தவிர, அவர் தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளருமான கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல, சபரீசனின் நண்பர் என்று கூறப்படும் ஜீ ஸ்கொயர் பாலா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐடி ரெய்டு என்ற பூச்சாண்டிக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும், இதன் மூலம் திமுகவின் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுத்தி விடலாம் என மத்திய அரசு நினைத்தால் அது நிறைவேறாது என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஜி ஸ்கொயர் பாலாவின் அலுவலகம், சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ளது. அங்கும் வருமானவரித்துறை அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளரான மோகனின் மகனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளருமான கார்த்திக்கின் வீட்டிலும், காலை 8 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 3 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதையறிந்து அப்பகுதியில் திரண்ட திமுகவினர், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் கார்திக் வீட்டின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அதிக அளவில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன், அவரது மகன் கார்த்திக் இருவரும் வீட்டிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments