நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என குறிப்பிடப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்டத்தில், வேறு பிற நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் இதுவரை 6 கோடியே 43 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 3ஆம் கட்டத்தில் நுழைந்துள்ள தடுப்பூசி திட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் அல்ல, விருப்பத்தின் பேரில் போட்டுக் கொள்ளலாம். கோவின் இணைய தளம் அல்லது ஆரோக்கியசேது செயலி மூலம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.
Comments