நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

0 4957
நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

இந்திய சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனிச்சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் விருது அறிவிப்புக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.

தங்கத் தாமரை மெடல், 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் பாராட்டுடன் இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படும். இதனிடையே தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை தலைவா எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவருக்கு உயரிய விருது அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது என ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்துக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தாதா சாகேப் விருது அளித்த மத்திய அரசுக்கும், வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments