நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்..!

0 1280
நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்..!

பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து அதிமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர்.  திருக்கோவிலூர் தொகுதியிலுள்ள மேல வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, தெற்கு தெரு, கட்டாம்பூசாரி தெரு ஆகிய பகுதிகளுக்கு வீடு வீடாக சென்ற வேட்பாளர் கலிவரதன், தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

திமுக வேட்பாளர் முருகேசன் தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் முருகேசன் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பரமக்குடி காந்தி சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆதரவாளர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அவர், திமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

வாக்குவேட்டையில் ஈடுபட்ட பாகூர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தனவேல்

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் களமிறங்கும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் காலை முதலே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஏம்பலம் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன், தொகுதிகுட்பட்ட கோர்க்காடு கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.  பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  சார்பில் களம்காணும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, பரிக்கல்பட்டு, கீழ்ப்பரிக்கல் பட்டு, காசிமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு திரட்டினார். அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பாஸ்கர்  புதுக்குளம் வீதி, தேங்காய்த்திட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராமஞ்சேரி பகுதியில் ஆதரவாளர்களுடன் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அளவில் செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும் வி.ஜி.ராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.  

குழந்தைக்கு பெயர் சூட்டி வாக்கு சேகரித்த அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்றும், சில இடங்களில் வாகனத்தில் சென்றும் அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பெண்குழந்தை ஒன்றுக்கு தமிழ்ச்செல்வி என பெயர் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர நடவடிக்கை, முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அதிமுக வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம் அயோத்தியாபட்டணத்தில் திமுக கொடியை கையில் ஏந்தியபடி, குதிரையில் வந்து வாக்குசேகரித்த தொண்டர் 

சேலம் அயோத்தியாபட்டணத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சாரத்திற்கு அக்கட்சி தொண்டர் ஒருவர் குதிரையில் வந்து வாக்குசேகரித்தார். ஏற்காடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக அயோத்தியாபட்டணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு குதிரையில் வலம் வந்த திமுக தொண்டர் ஒருவர் கையில் கட்சி கொடியை ஏந்தியபடி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குசேகரித்தார்.

திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிர தேர்தல் பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச மும்முனை மின்சாரம், மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படும், பயிர் காப்பீடு திட்டம் விரிவு படுத்தப்படும், ஏரி குளங்களை தூர் வார பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை எடுத்துரைத்து, அவர் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். 

தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா ராசிபுரம் நகர் பகுதிகளில் தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கிய அவர் அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கி கூறினார்.

வீதி வீதியாக ஆட்டோவில் சென்று தீவிர வாக்கு சேகரித்த வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் வெற்றி அழகன்

சென்னை வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி அழகன் வீதி வீதியாக ஆட்டோவில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிழக்கு மாடவீதி, மேற்கு மாட வீதி, ஐ.சி.எப். உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ள துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நிலம், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு தரமான இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும், முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், வருடத்தில் ஆறு விலையில்லா சிலிண்டர் உறுதியாக வழங்கப்படும் என அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு பேசினார்.

திருவாரூர் நன்னிலம் தொகுதியில் ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளர் கணேசன், டீக்கடையில் டீ ஆற்றி வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளர் கணேசன், டீக்கடையில் டீ ஆற்றி வாக்கு சேகரித்தார். நன்னிலம் தொகுதிக்குப்பட்ட வண்டாம்பாளை, ஆண்டிபந்தல், சன்னாநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று, பூக்கடை, வணிக கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டிய வேட்பாளர் கணேசன், நரிக்குறவரின் இருசக்கர வாகனத்தில் சென்று ஒலி பெருக்கி மூலம் ஆட்டோ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பரோட்டா போட்டு வாக்கு சேகரித்த ஆர்கே நகர் தொகுதி அதிமுக வேட்பாளர்

சென்னை ஆர்கே நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் காசிமேட்டில் வாக்குசேகரித்தார். பவர் குப்பம் பகுதிக்கு சென்ற அவர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற ஆர்.எஸ்.ராஜேஷ், பரோட்டா போட்டு வாக்கு திரட்டினார்.

தந்தை செய்ய நினைத்த பணிகளை நிறைவேற்றிட வாய்ப்பு தாருங்கள் - கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தும், நாகர்கோவில்  சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் புடைசூழ திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட மறைந்த எம்பி வசந்த்குமாரின் மகன் விஜய் வசந்த், தன் தந்தை செய்ய நினைத்த பணிகளை நிறைவேற்றிட தனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எனக்கூறி வாக்குசேகரித்தார்.

மீன்களை வெட்டி சுத்தம் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களிடமும்  வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கசாலி மீன் மார்க்கெட்டில் வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட அயோத்திகுப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட மீனவ பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மீன் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார். அப்போது மீன்களை வெட்டி சுத்தம் செய்து கொடுத்து வாடிக்கையாளர்களிடமும்  வாக்கு சேகரித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்ன துரையை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள்  நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவார்கள் என்று கூறிய முத்தரசன், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார்.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் உள்நாட்டு மீனவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என உறுதி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.கடுக்கரை, அழகியபாண்டிபுரம், எட்டாமடை ,கேசவன்புதூர் ,தோமையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளை அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்த தளவாய் சுந்தரம்
உள்நாட்டு மீனவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

500 கிலோ சாமந்தி பூ தூவி கிருஷ்ணகிரி திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர் தூவி கூட்டணிக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். எர்ரஅள்ளி, விஎஸ்கே நகர் , அண்ணாநகர் , சவுலூர், கதிரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ சாமந்தி பூ மலர் தூவி  அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.திமுக தேர்தல் வாக்குறுதியை எடுத்துக்கூறி மக்களிடம் செங்குட்டுவன் வாக்குச் சேகரித்தார்‍.

சேலம் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியை ஆதரித்து தம்மம்ப்பட்டியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக கெங்கவல்லிக்கு பிரச்சாரத்திற்காக சென்றுகொண்டிருந்த தன்னை பார்க்கவேண்டுமென சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஆவலுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளியை உதயநிதி ஸ்டாலின் தனது காரிலிருந்து இறங்கி சந்தித்துவிட்டு சென்றார்.

தென்னிந்திய திருச்சபை ஆயரை சந்தித்து ஆதரவு திரட்டிய திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, தென்னிந்திய திருச்சபை ஆயரை சந்தித்து ஆதரவு திரட்டினார். திருச்சி மேற்கு தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கே.என்.நேரு, தென்னிந்திய திருச்சபை ஆயர் சந்திர சேகரனை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீவைகுண்டம் காங்.வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்-க்கு ஆதரவாக திரைப்பட காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி   காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்க்கு ஆதரவாக திரைப்பட காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்ட அவர் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம்  சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று தனது  பாணியில் கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

நெசவாளர்களின் குறைதீர்க்க தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சின்னாளபட்டி நெசவாளர் குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர் பெண்களிடமும் நெசவாளர்களிடமும் தேர்தல் அறிக்கையின் துண்டறிக்கைகளை கொடுத்து நெசவாளர்களின் குறைதீர்க்க தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.

திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துரைத்து திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காரணி பகுதியில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைத்திட்டம் நூற்றிஐம்பது நாளாக உயர்த்தப்படும், சிலிண்டருக்கு 100ரூபாய் மானியம் வழங்கப்படும், கொரோனா நிவாரணமாக 4ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

கோவை தெற்கு தொகுதியில் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரை சந்தித்து ஆதரவு கோரிய கமல்

கோவை தெற்கு தொகுதியில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவையில் முகாமிட்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், இன்று சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்திற்கு சென்றார். அங்கு பயிலும் மாணவர்கள் கமல்ஹாசனுக்கு சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கௌமார மடாலயத்தின் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளாரை சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் உடனிருந்தார்.

இலவச சிலிண்டர்களை வைத்து பிரியாணி நன்றாக  சமையுங்கள் - நடிகை நமீதா தேர்தல் பரப்புரை

தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா வாக்கு சேகரித்தார். பவுன்சர்கள் புடைசூழ வந்த நமீதா, திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது கூட்டத்தில் பெண் ஒருவர் வைத்திருந்த குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் காகிதத்தில் அவருக்கு புரிந்த மொழியில் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்ததை, வேடிக்கையான தமிழ் உச்சரிப்புடன் பேசினார்.

அதிமுக தரப்போகும் இலவச சிலிண்டர்களை வைத்து பிரியாணி நன்றாக சமையுங்கள் என அறிவுறுத்திய நடிகை நமீதா, தான் வெஜிடேரியன் என்பதால், வெஜிடபிள் பிரியாணி செய்தால் தனக்கு கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு ஆதரவாக அவரது மனைவி, மகன் வாக்குசேகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு ஆதரவாக அவரது மனைவியும், மகனும் வாக்குசேகரித்தனர். சென்னை முகப்பேர் ஜே.ஜே நகர்,பாடி குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்தவெளி ஆட்டோவில் சென்ற அவர்கள், உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு ஆதரவாக அக்கட்சி பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு பிரச்சாரம் மேற்கொண்டார்.

கமல்ஹாசன் அரசியலில் நீண்ட பயிற்சி எடுக்க வேண்டும் - வானதி சீனீவாசன்

அரசியலில் கமல்ஹாசன் நீண்ட பயிற்சி எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ட்விட்டர் அரசியல்வாதி இதுவரை எத்தனை மக்கள் பிரச்னைகளில் களத்தில் இருந்திருக்கிறார் என்று கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளும், மகிழ்ச்சியும் கூறிய அவர்,பொருத்தமான நபருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகை ரோகிணி வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, திரைப்பட நடிகை ரோகிணி,பிரச்சாரம் மேற்கொண்டார். கோவிந்தாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று, வாக்கு சேகரித்த நடிகை ரோகிணி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு தருமாறு, வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் 

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கரிகாலன் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்தார். தாம்பரம் மார்க்கெட் பகுதிக்கு ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் சென்ற அவர், மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி, குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கவிதை வாசித்துக் காட்டிய சிறுமிக்கு சால்வை அணிவித்தார் உதயநிதி

சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தாதகாப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார். அப்போது யோக ஸ்ரீ என்ற சிறுமி உதய நிதி ஸ்டாலினை ஆரத் தழுவி கவிதை படித்தார்.

கவிதை வாசித்த சிறுமிக்கு, உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்தி முத்தமிட்டார்.

சமையலுக்கான புளியை சுத்தம் செய்து கொடுத்து பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஃபரிதா, சமையலுக்கான புளியை சுத்தம் செய்தும், பெண்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்தார். பேரணாம்பட்டு, பெரியதாமல், செருவு, மசிகம் உள்ளிட்ட பகுதிகளில், நடந்து சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து, மசிகம் கிராம சிலம்ப கலைஞர்கள், சிலம்பாட்டம் ஆடி, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எம்எல்ஏ பதவி சேவை செய்யத்தானே தவிர சம்பாதிக்க அல்ல : திருச்செங்கோடு கொ.ம.தே.க.வேட்பாளர் ஈஸ்வரன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுகவுடனான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் ஈஸ்வரன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர், அங்கிருக்கும் கடைகளில் வாக்குதிரட்டினார்.

ஹோட்டலில் உணவு பரிமாறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மதிகோன் பாளையம், காமாட்சி அம்மன் தெரு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சாலையோர டீக்கடையில் டீ தயாரித்து குடித்தார். தொடர்ந்து அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்ற தடங்கம் சுப்பிரமணி, அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறி உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

விருத்தாசலம் தொகுதியில் தனது பேரவை சார்பில் போட்டியிடும் கேசவபெருமாளுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வாக்கு சேகரிப்பு 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கேசவபெருமாளை ஆதரித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர் கேசவ பெருமாளுடன் விருத்தாசலம் பெரியார் நகரில் இருந்து பேருந்து நிலையம் வரை நடை பயணமாக சென்ற அவர், மக்களிடையே மோதிரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அன்னதானத்திற்கான சமையல் வேலையில் பங்கேற்று வாக்குச் சேகரித்த ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்‍. இத்தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், கொல்லன்வயலில் உள்ள கோவில் ஒன்றிற்கு சென்று, அங்கு அன்னதானத்திற்காக நடைபெற்ற சமையல் வேலையில் பங்கேற்று வாக்குச் சேகரித்தார்‍.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிலம்பம் சுற்றியும் ,குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பழனி, சிலம்பம் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட எறையூர், போந்தூர், வல்லம், வடகால் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அவர், அதிமுக அரசின் பத்தாண்டு வளர்ச்சித் திட்டப் பணிகளை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் குதிரை வண்டியில் சென்றும் வாக்கு சேகரித்தார்.

ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி அந்தியூர் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான K.A. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதிமுக வேட்பாளர் சண்முக வேலுவுக்கு ஆதரவாக அத்தாணியில் நடைபெற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கூட்டம் கூடாததால் பிரச்சாரத்தை கைவிட்ட சீமான் ?

பிரச்சாரத்திற்காக வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டம் கூடாததால் கொளத்தூரில் பிரச்சாரத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது. கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெமிலஸ் செல்வாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க லட்சுமியம்மன் கோயில் தெரு அருகே சீமானின் பிரச்சார வாகனம் வந்து நின்றது. இதனால் அப்பகுதியாக வந்த வாகனங்களை நாம் தமிழர் கட்சியினர் அவசர அவசரமாக மாற்றுவழியில் திருப்பிவிட்டனர்.

ஆனால் பிரச்சாரத்தை தொடங்காமலயே சீமான் அருகிலிருக்கும் திருவிக நகர் தொகுதிக்கு சென்றுவிட்டார். பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் நேரமின்மையே என அக்கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

100 நாள் வேலையில் தாயம் விளையாடலாம்,  தூங்கலாம் என கூறி வாக்கு சேகரித்த ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.பி. நடராஜ் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைத்தவுடன் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டாயிரம் பேருக்கு பிரியாணி விருந்து அளித்து வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு வழங்குவதை விழாவாக நடத்தப்படும் என்றார். அந்த பொருட்களை வீட்டில் அமைத்து தருவதுடன், துவைக்க தெரியாத பெண்களிடம் நாலு சேலைகளை வாங்கி துவைத்து காட்டிவிட்டு வருவோம் என்று கூறி கலகலப்பூட்டினார்.

100 நாள் வேலையில் தாயம் விளையாடுவது, தூங்குவது போன்ற வேலைகளை சிறப்பாக செய்தாலும் கண்டு கொள்ள மாட்டோம் என்றும் அதிமுக வேட்பாளர் என்.பி. நடராஜ் நகைச்சுவையாக பேசினார்.

மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன்,  தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே கேட், காரை, பொன்னேரி கரை, காரப்பேட்டை, வையாவூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு தனக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். காரை கிராமத்தில் பேருந்தில் ஏறிச் சென்று பயணிகளிடம் துண்டுபிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர்  மாட்டுவண்டியில் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த திருவையாறு தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் திருமாறன், டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்த அவர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.

அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர் மா.சுப்பிரமணியன் - சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைச்சாமி குற்றச்சாட்டு

அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, சிட்கோ ஒதுக்கீட்டு வீட்டை வளைப்பதற்காக மாமனார் பெயரையே மாற்றிக் கூறியவர் மா.சுப்பிரமணியன் என்று, சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளரிடம் பேசிய சைதை துரைசாமி, நில மோசடி புகாரில் சிக்கியுள்ள மா.சுப்ரமணியம் அது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க முடியுமா என்றார்

தன்னை வெற்றி பெற செய்தால், திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலுக்கு  தேர் செய்து ஓட விடுவேன் - நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், குன்னத்தூர் மற்றும் திருவேங்கடநாதபுரம் பகுதிகளில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்னை வெற்றி பெற செய்தால், திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலுக்கு  தேர் செய்து ஓட விடுவேன் என்று அவர் உறுதி அளித்தார்.

நாம் தமிழர் கட்சியினருக்கு காது வழியே அறிவு வழிகிறது - சீமான்

சென்னை எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லெட்சுமியை ஆதரித்து புரசைவாக்கத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.  நாம் தமிழர் கட்சியினருக்கு அறிவு காதுவழியே வழிவதாகவும், இருக்கின்ற மூளையை வைத்துக்கொண்டு வேலை செய்ய நேரமே இல்லை என்றும் நகைச்சுவையாக தெரிவித்த சீமான், தங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்னை காசு தான் எனக் கூறினார்.

வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா அளித்ததாக திமுகவினர் புகார்

சென்னை பெருங்குடியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். கல்லுக்குட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக பிரமுகர் ஒருவர் பணம் அளிப்பதாக பறக்கும் படையினருக்கு திமுகவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பறக்கும் படையினர், அதிமுக பிரமுகரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பணம் பெற்றவர்களின் பட்டியலை பறிமுதல் செய்ததாக கூறப்படும் நிலையில், பணப் பட்டுவாடா செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் பறக்கும் படையினர் விட்டுவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எம்ஜிஆரின் பாடலை பாடி நரிக்குறவ இன மக்களிடம் ஓட்டு சேகரித்த நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், எம்ஜிஆரின் பாடலை பாடி நரிக்குறவ இன மக்களிடம் ஓட்டு சேகரித்தார். பேட்டை48வது வார்டுக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் பிரச்சாரம் செய்த அவர், எம்ஜிஆர்,ஜெயலலிதா ஜோடியாக நடித்த ஒளி விளக்கு என்ற திரைப்படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். அந்தப் பாடலைக் கேட்ட நரிக்குறவ இன மக்களும் குதூகலத்துடன் அவரோடு சேர்ந்து பாடலைப் பாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு கிழக்கு காங்.வேட்பாளர் திருமகன் ஈவெராவை ஆதரித்து அக்கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெராவை ஆதரித்து அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு நகர்ப்புறப்பகுதிக்குட்பட்ட மரப்பாலம், பழைய பார்க் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் அவர் வாக்கு சேகரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி, பிரதமர், காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சி என குற்றம்சாட்டியிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

நகர் முழுவதும் வை பை சேவை வழங்குவதாக பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல் வாக்குறுதி

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்‍. திருவண்ணாமலை தேரடி வீதி, திருவூடல் வீதி, சன்னதி தெரு, உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர் பரப்புரையில் ஈடுபட்டார்‍. நகர் முழுவதும் வை பை (wi-fi) சேவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து தணிகைவேல் ஆதரவு திரட்டினார்‍.

விருப்பம் இருந்தால் ஓட்டு போடு இல்லை என்றால் விடு - வாக்காளரிடம் கோபப்பட்ட அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி

தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட வாக்காளர் ஒருவரிடம்,வேப்பணஹள்ளி தொகுதி அதிமுக வேட்பாளரும், அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி கோபமடைந்தார்‍. கொம்மேப்பள்ளி கிராமத்தில் வாக்குச்சேகரிப்பின் போது , அரசு உரிய நடவடிக்கை எடுத்தாலும், வறட்சி காலத்தில் யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுவதாக கே.பி.முனுசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய வாக்காளர் ஒருவர்,வனத்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்‍. இதனால் கே.பி.முனுசாமி கோபமடைந்து விருப்பம் இருந்தால் ஓட்டு போடு இல்லை என்றால் விடு என்றார்.

பானை தயாரித்து கொடுத்து, பானை சின்னத்திற்கு வாக்கு கோரிய செய்யூர் தொகுதி வி.சி.க வேட்பாளர் பனையூர் பாபு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு, பானை தயாரித்து கொடுத்து, வாக்கு கோரினார். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தலூர், கோட்டைப்புஞ்சை, புத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார். அறப்பேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பனையூர் பாபுவிற்கு, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அப்போது, மண்பாண்ட தொழிலாளர்களோடு இணைந்து, பானை செய்து அசத்தி பனையூர் பாபு வாக்கு கோரினார்.

சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய அவர், சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கொடுப்பதை கொடுத்தால் தெரியுமடா உன் இடுப்பை உடைத்தால் புரியுமடா என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளை நினைவுக்கூர்ந்தார்.

தன் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் என்றும், இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா உறுதி

திருச்சியில் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துறையூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திரா காந்தி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சரின் பிரச்சார கூட்டத்தில் சக வேட்பாளர்கள் 8 பேருடன் பங்கேற்றார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது கணவர் தங்கமணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் வீட்டு பட்டா வழங்குவதாக வாக்குறுதியளித்து சென்னை மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்தி பரப்புரை

சென்னை மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மூர்த்தி, வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்‍. பாடியநல்லூர்,பம்மதுகுளம், நல்லூர், கும்மனூர் உள்ளிட்ட பகுதிகளில்
கூட்டணிக்கட்சியினருடன் சென்று அவர் பரப்புரை மேற்கொண்டார்‍. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும்,பட்டா இல்லாதவர்களுக்கு ஒரே மாதத்தில் வீட்டு பட்டா வழங்குவதாக உறுதியளித்தும் மாதவரம் மூர்த்தி ஆதரவு திரட்டினார்.

அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வாக்குறுதி

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின்,தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட கடுக்கரை,அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி, ஈசாந்திமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தும் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, மீண்டும்  தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

பிரச்சாரத்தின் போது, டீ கடை ஒன்றில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேனீர் அருந்திய பார்த்தசாரதி, துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார். 

சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, தொகுதிக்கு செய்த பணிகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார். அப்போது அதே வழியாக வந்த விருகம்பாக்கம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் குணசேகரன், பார்த்தசாரதியின் உடல் நலம் குறித்து விசாரித்து கை குலுக்கி சென்றார். 

வாரிசு அடிப்படையிலோ., நில அபகரிப்போ இல்லை - மா.சுப்பிரமணியன் 

சென்னை சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு, அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கிண்டி சிட்கோ நிலம் என்பது, நண்பர் இரண்டரை லட்ச ரூபாய்க்கு வாங்கி கொடுத்தது என்றும், வாரிசு அடிப்படையிலோ, அல்லது அபகரிப்போ இல்லை என்றும், கூறியுள்ளார். 

அருள்வாக்கு கூறிய பூசாரி  - காலில் விழுந்து ஆசி பெற்ற செந்தில்குமார்

 திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐபி செந்தில்குமார், கொடைக்கானலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான கேசிபட்டி, தாண்டிக்குடி, குப்பம்மாள் பட்டி, பண்ணைக்காடு, உள்ளிட்ட மலைக்கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது, மலைக்கிராம பெண்கள் சிலர் குத்தாட்டம் போட்டனர்.இதனை தொடர்ந்து, காளியம்மன் கோவில் பூசாரிக்கு திடீரென்று அருள் வந்து அருள்வாக்கு கூறிய நிலையில், பூசாரியின் காலில் விழுந்து செந்தில்குமார் ஆசிபெற்றார்.

அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகன் தீவிர வாக்குச் சேகரிப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.பி. அன்பழகன், பாறைகொட்டாய்,கொத்தலம், கதிரம்பட்டி, மாரவாடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்‍.

மலை கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம், தரமான சாலை வசதி உள்ளிட்ட இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும் அமைச்சர் வாக்குச் சேகரித்தார்‍.

அதிமுகவுடனான கூட்டணி வைத்தது ஏன்? - அன்புமணி இராமதாஸ் விளக்கம்

முதலமைச்சர்., விவசாயி என்பதாலும், சமூக நீதியைக் காப்பதாலும், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாக, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து, விழுப்புரம், நாட்டார்மங்கலம், கூட்டேரிப்பட்டு, செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் அன்புமணி இராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

அதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சியமைப்பார் என அன்புமணி நம்பிக்கைத் தெரிவித்தார். 

திமுக கொடி கட்டிய சிறிய பைக்கில் வாக்கு சேகரித்த 9 வயது சிறுவன்

சென்னை - எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், வீதி, வீதியாக சென்று, பிரசாரம் மேற்கொண்டார். புரசைவாக்கம் பகுதியில் வீதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று, ஆதரவு திரட்டிய பரந்தாமன், திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சைரஸ் என்ற 9 வயது சிறுவன், சிறிய ரக மோட்டார் சைக்கிளில் கொடி கட்டி, வாக்கு சேகரித்தார்.

கோவை தெற்கு தொகுதியை நாட்டையே திரும்பி பார்க்க வைப்பேன் - கமல்

கோயம்புத்தூர் தெற்கு தொகுதி மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டால், நாட்டையே திரும்பி பார்க்க வைக்க முடியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், காந்திபுரம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீதி, வீதியாகச் சென்று, தமது டார்ச் லைட் சின்னத்திற்கு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமது தேர்தல் அரசியல் பயணம் தொடங்கும் இடம் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக இருக்கும் எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், தமது கையில் பணம் கிடையாது என்றும், நேர்மை மட்டுமே தமது மூலதனம் என்றும் தெரிவித்தார். 

முஹம்மது இத்ரீஸை ஆதரித்து நடிகை ராதிகா  வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் முஹம்மது இத்ரீஸை ஆதரித்து நடிகை ராதிகா பிரசாரம் மேற்கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே திறந்தவெளி வேனில் சென்று முஹம்மது இத்ரீஸூக்கு ஆதரவாக ஆட்டோ சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பொது மக்களில், பாதிபேர் தான் முக கவசம் அணிந்துள்ளதாகவும், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என முக கவசம் அணியாமல் நடிகை ராதிகா வலியுறுத்தினார்.

தென்காசியில் 4 தொகுதிகளில் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம்

தென்காசி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வாசுதேவநல்லூர் அமமுக வேட்பாளர் தங்கராஜ், கடையநல்லூர் அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன், தென்காசி அமமுக வேட்பாளர் முகம்மது மற்றும் ஆலங்குளம் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். 

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் திறந்தவெளி வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுக தான் என கூறி ஆதரவு திரட்டினார்.

 

 
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments